வாஷிங்டன்:

அகதிகளாக வரும் குழந்தைகளை ராணுவ தளங்களில் தங்க வைக்க டிரம்ப் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமெரிக்காவின் எல்லை வழியாக சட்டவிரோதமாக வரும் அகதிகளை கட்டுப்படுத்த டிரம்ப் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில் எல்லையை தாண்டும் 18 வயதுக்கு குறைவான அகதிகளை ராணுவ தளங்களிலேயே தங்கவைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அகதிகளாக வரும் குடும்பத்தை பிரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் அனாதைகளாக இருக்கும் குழந்தைகளின் நலனில் அந்நாட்டு சுகாதாரம் மற்றும் மனித சேவை துறை கவனம் செலுத்தி வருகிறது. குழந்தையின் உறவினர் வசம் அந்த குழந்தை ஒப்படைக்கும் வரை இந்த துறை தான் குழந்தையை பாதுகாக்கும்.

இந்த துறை அதிகாரிகள் பென்டகன் அதிகாரிகளுக்கு ஒரு இ.மெயில் அனுப்பியுள்ளனர். அதில் அடுத்த 2 வாரங்களில் டெக்சாஸ் மற்றும் அர்கான்சாஸில் உள்ள 4 ராணுவ தளங்களை பார்வையிடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இங்கு எல்லை கடந்து அகதிகளாக வரும் குழந்தைகளுக்கு தங்குமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற இடங்களை தேர்வு செய்வதற்காகவே இந்த துறை அதிகாரிகள் ராணுவத் தளங்களில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

இது ஆரம்ப கட்ட நடவடிக்கை தான். இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை என்று அந்த இ.மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த துறை தற்போது 10 ஆயிரத்து 571 குழந்தைகளை பராமரித்து வருகிறது. 14 மாநிலங்களில் 100 தங்குமிடங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.