வாஷிங்டன்:

ஹெச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வரும் வாழ்க்கை துணையும் பணியில் சேரும் வகையில் ஹெச் -4 விசா நடைமுறையை ரத்து செய்ய டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. இதனால் 70 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்.

இந்நிலையில் இந்த முடிவை வாபஸ் பெற கோரியும், ஹெச் -4 விசா நடைமுறையை தொடர வேண்டும் என்று அமெரிக்காவின் 130 எம்.பி.க்கள் வலியுத்தியுள்ளனர். இந்தியா-அமெரிக்கா காங்கிரஸ் பெண்மணி பிரமிளா ஜெயபால் தலைமையிலான 130 பேரும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி என இரு கட்சி எம்.பி.க்களும் அடங்கியுள்ளனர்.

அந்த கடிதத்தில் ‘‘ஆயிரகணக்கான வாழ்க்கை துணைக்கு வேலைவாய்ப்பு அளித்த ஹெச்-4 விசா மூலம் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது. இதன் மூலம் பெரும்பாலும் பெண்கள் தான் அதிகளவில் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அதனால் இந்த நடைமுறையை ரத்து செய்யும் முடிவை கைவிட வேண்டும். ஹெச்4 விசா தொடர வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.