அகர்தலா:

திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் நாளை (18ம் தேதி) நடக்கிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 60 எம்எல்ஏ.க்களை தேர்வு செய்ய நடக்கும் இந்த தேர்தலில் 297 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில் 23 பெண்கள் போட்டியிடுகின்றனர் என்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. 2 பேர் முதல்வர் மாணிக் சர்க்காரை எதிர்த்து போட்டியிடுகின்றனர். இந்தியாவிலேயே வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பெண் வாக்காளர்களின் சதவீதம் அதிகமாக உள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 15 பெண்கள் மட்டுமே போட்டியிட்டனர். இதில் 5 பேர் வெற்றி பெற்றனர். 7 பேர் டெபாசிட் திரும்ப பெற்றனர். 2008ம் ஆண்டு தேர்தலில் 31 பெண்கள் போட்டியிட்டனர். இதில் 3 பேர் பெற்றி பெற்றனர். 22 பேர் டெபாசிட் திரும்ப பெற்றனர். தற்போதைய அமைச்சரவையில் உள்ள 12 பேரில் ஒருவர் பெண்.

2008 மற்றும் 2013ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக வாக்காளர் பட்டியலில் உள்ள முறையே 91.72 சதவீதம் மற்றும் 92.94 சதவீத பெண்கள் வாக்களித்தனர். இதில் ஆண்கள் 90.74 சதவீதம் பேரும், 90.73 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.

தற்போது தேசிய கட்சிகளான கம்யூனிஸ்ட் சார்பில் 7, காங்கிரஸ் சார்பில் 5, பாஜக சார்பில் 4, திரிணமுள் காங்கிரஸ் சார்பில் 2 பெண்களும் போட்டியிடுகின்றனர். திரிபுரா மாநிலத்தில் அரசியல் முடிவை எடுக்கும் முக்கிய இடத்தில் பெண்கள் இருப்பது நிச்சயமாகியுள்ளது.