சுஜித்தின் தாய் கலாமேரிக்கு அரசு பணி வழங்க பரிசீலிக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித், 80 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டான். சுஜித்தின் உடல் அருகில் இருந்த பாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவனது குடும்பத்திற்கு அரசு தரப்பில் ரூ. 10 லட்சம், அதிமுக மற்றும் திமுக சார்பில் ரூ. 10 லட்சம், காங்கிரஸ் சார்பில் 3 லட்சம் என நிதியுதவி வழங்கப்பட்டது. அப்போது தன் மனைவி 12ம் வகுப்பு முடித்துள்ளார் என்பதால், அவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என சுஜித்தின் தந்தை ஆரோக்கியதாஸ், முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, “திருச்சி மாவட்டத்தில் உள்ள பல ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுவிட்டன. வேறு ஏதேனும் ஆழ்துளை கிணறுகள் இருக்குமேயானால், அரசு அறிவித்துள்ள பொது இலவச அழைப்பு எண்ணுக்கு மக்கள் தகவல் அளிக்கலாம். தகவல் அளித்த 24 மணி நேரத்திற்குள் ஆழ்துளை கிணறு மூடப்படும். ஆழ்துளை கிணறுகள் பயன்பாடு இல்லாமல் இருந்தால், அவற்றை மூடுவது அல்லது மழை நீர் சேமிப்பு திட்டத்திற்காக அதை பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

சுஜித்தின் தாய் கலாமேரிக்கு அரசு பணி வழங்க வேண்டும் என அவரது கணவர் ஆரோக்யதாஸ் கோரிக்கை வைத்திருந்தார். சுஜித்தின் தாய் 12ம் வகுப்பு முடித்துள்ளார். அதனால் அவருக்கு அரசு பணி வழங்குவதில் தடை இல்லை. அரசு பணி வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம். விரைவில் பணி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.