சென்னை: மறைந்த விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதால், அங்கு பொதுமக்கள் சாரை சாரையோக வந்துகொண்டிருக்கின்றனர். இதையொட்டி கோயம்பேடு பகுதியிளல் போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டு உள்ளது.
உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் (வயது 71) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை கழகம் தெரிவித்திருந்தது. இந்த சூழலில் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார் நுரையீரல் அழற்சி காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு விஜயகாந்தின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலர் அஞ்சலி செலத்தினார்.
இதைத்தொடர்ந்து, இன்று மதியம் விஜயகாந்தின் உடல், சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகம் கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் மரணச் செய்தியை அறிந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், தேமுதிக தொண்டர்களும் அவரின் ரசிகர்களும் கண்ணீர் கடலில் மூழ்கியதுடன் மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்த கோயம்பேடு நோக்கி வாகனங்களில் வந்தவண்ணம் உள்ளனர். மேலும் பொதுமக்களும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த கோயம்பேட்டில் குவிந்து வருவதால், கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விஜயகாந்த்தின் ரசிகர்களும், பொதுமக்களும், கோயம்பேடு பகுதியில் அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டுள்ளனர், ஏராளமானோர் கோயம்பேடு மேம்பாலத்தி லும் திரண்டுள்ளனர். இதையடுத்து, கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் பணிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில் கோயம்பேடு மேம்பாலத்தில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், அண்ணாநகர் முதல் கோயம்பேடு வரை ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பாடி மேம்பாலம் வரை போக்குவரத்து நெரிசல் இருப்பதால், வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தருமாறும் போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நாளை மாலை நல்லடக்கம்!