ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தின் பைலாடிலா மலைப்பகுதியில், என்எம்டிசி நிறுவனத்திற்கு, இரும்புத் தாது சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, 10000 பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போரட்டம் ஒடிசாவில் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து பழங்குடியின மக்கள் நடத்திய நியாம்கிரி இயக்கத்தைப் போன்று தீவிரமடையும் என்றும் கருதப்படுகிறது. ஒடிசா மக்களின் போராட்டத்தின் விளைவாக அவர்களின் பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த திட்டம் கைவிடப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

மாவோயிஸ்ட் செல்வாக்கு நிறைந்த சத்தீஷ்கர் மாநிலத்தின் தண்டேவாடா பகுதியில், என்எம்டிசி நிறுவனம் ஏற்கனவே இரண்டு சுரங்க திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. தற்போது, மற்றொரு புதிய திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ள பைலாடிலா மலைப்பகுதியில் உலகத்தரம் வாய்ந்த இரும்புத்தாது உள்ளது. ஆனால், இப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பெரும் செல்வாக்கோடு திகழ்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களே மக்களுக்கான பாதுகாப்பு அரண்களாக செயல்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.