டில்லி

காஷ்மீர் எல்லையில் உள்ள லஷ்கர் ஈ தொய்பா, ஜெய்ஷ் ஈ முகமது, ஹிஜ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட தீவிரவாதிகளின் முகாம்களை மூட பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அன்று காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத இயக்கம் தற்கொலைப்படை தாக்குதலை நிகழ்த்தியது. இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை ஒட்டி சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு கிளம்பியது. பல நாடுகளும் இந்த தாக்குதலுக்காக பாகிஸ்தான் மீது கண்டனம் தெரிவித்தன.

தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடனான வர்த்தக உறவை இந்தியா முழுவதுமாக துண்டித்துக் கொண்டது. பாகிஸ்தானின் முக்கிய உணவுப் பொருட்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பாகிஸ்தான் ஏற்கனவே கடும் பொருளாதார வீழ்ச்சியில் உள்ளது. இந்த வீழ்ச்சியை சரி கட்ட நிதிநிலை நடவடிக்கை குழுவின் உதவியை பாகிஸ்தான் பெரிதும் எதிர்பார்த்து வந்தது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டும் என இந்தியா அதிகார மட்டத்தில் நிதிநிலை நடவடிக்கை குழுவுக்கு அழுத்தம் கொடுத்தது. ஏற்கனவே பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நாடு என்னும் குற்றச்சாட்டினால் கிரே பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அந்த நாடு கருப்பு பட்டியலுக்கு மாற்றப்படும் அபாயம் உள்ளது.

கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடுகளுக்கு உலக வங்கி உள்ளிட்ட எந்த ஒரு நிதிநிலை அமைப்பும் உதவிகளை அளிக்காது. மேலும் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்படுவதும் எளிதானது இல்லை. நிதிநிலை நடவடிக்கை குழுவின் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. எனவே பாகிஸ்தான் உடனடியாக தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

காஷ்மீர் எல்லையில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீர் பகுதியில் லஷ்கர் ஈ தொய்பா, ஜெய்ஷ் ஈ முகமது, ஹிஜ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் 13 இடங்களில் முகாம் இட்டுள்ளன. அந்த முகாம்களை உடனடியாக மூட பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் எல்லை தாண்டி நடக்கும் பயங்கரவாத நிகழ்வுகள் இனி நடக்காது என கூறப்படுகிறது.