மதுரை: ‘நம்மை காக்கும் 48’ திட்டத்தில் தமிழ்நாட்டிலேயே அதிகம் பேருக்கு சிகிச்சை அளித்து மதுரை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 2800 பேர் சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளது.

விபத்தில் அடிபடுவோருக்கு உடனடியாக இலவச சிகிச்சை அளிக்கும் வகையில், டிசம்பர் 2021ல் தமிழ்நாடு அரசு ‘நம்மை காக்கும் 48’ எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேர அவசர சிகிச்சைக்கான செலவை அரசு மேற்கொள்ளும்  என்றும்,  இந்தத் திட்டத்தின் மூலம், பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை வரம்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதில், 81 வகையான தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ முறை செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்காக, சாலையோரங்களில் உள்ள தனியார், அரசுத் தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்று மொத்தம் 609 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டு முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இந்தத் திட்டம்  12 மாத காலத்துக்குச் செயல்படுத்தப்படும். பின்னர் வருடாந்தர செலவுகளை மதிப்பாய்வு செய்து, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்துடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ‘நம்மை காக்கும் 48’ திட்டத்தின்படி, தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் அவசர மருத்துவ பிரிவு துறை சார்பில் இதுவரை 2800 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். தமிழ்நாடு அளவில் அதிகம்பேருக்கு சிகிச்சை அளித்து மதுரை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது என்று தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.