நாமக்கல்: ஒகேனக்கல்  அருகே  சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 49 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அதிக காயம் ஏற்பட்டுள்ள  7 பேர் மேல்சிகிச்சைக்காக  தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

விழுப்புரத்திலிருந்து ஒகேனக்கல் பகுதிக்கு வந்த சுற்றுலாப் பேருந்து இன்று காலை ஒகேனக்கல் அருகே உள்ள கணவாய் பகுதியில்  திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த  49 பேர் காயமடைந்தனர். இவர்களில் 7 பேர் அவசர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பென்னாகரம் காவல்றையினர்,  விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,  விபத்துக்குள்ளான பேருந்தில்  பயணித்த 56 பேரில் 49 பேருக்கு மருத்துவ அலுவலர் கனிமொழி தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் படுகாயம் அடைந்த வைஷ்ணவி (17), சத்யா (30), ராம் பிரசாத் (22), ரோஜிபியா (48), ஜெயனம்மாள், மதன்குமார், ஹன்னா ஆகிய ஏழு பேர் அவசர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மருத்துவர் ஒருவர்  ஓய்வு விழாவை கொண்டாடுவதற்காக, அவருடன் பணிபுரியும் சக மருத்துவர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர்களின் குடும்பத்தினருடன் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலா செல்லும் வகையில், தனியார் பேருந்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வந்ததாகவும், இந்த பேருந்து   ஒகேனக்கல் கணவாய் பகுதி ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் சுற்றுலாப் பேருந்து சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த பாமக கௌரவ தலைவரும் பெண்ணாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி,  தொலைபேசி வாயிலாக மருத்துவ அலுவலரிடம் விசாரித்து, தேவையான நடவடிக்கை எடுத்த வலியுறுத்தி உள்ளதாகவும்,  காயமடைந்தவர்களிடம் ஆறுதல் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.