நொய்டா: உ.பி. மாநிலம் ஹத்ராசில் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், உ.பி. எல்லைக்குள் தடுத்து நிறுத்தப்பட்ட, ராகுல், பிரியங்கா இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்ல திட்டமிட்டு உள்ளனர். காங்கிரஸ் எம்.பி.க்களுடன் அவர்கள் உ.பி.க்குள் நுழைய திட்டமிட்டு உள்ளதால்,  மாநில எல்லையில் ஆயிரக்கணக்கான போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர். முன்னதாக மாநில காங்கிரஸ் தலைவரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தாலும் எதிர்க்கட்சிகள் அந்த பிரேத பரிசோதனை அறிக்கையை நம்ப மறுத்து வருகின்றனர்.

இதையடுத்து,  இரண்டு நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகிய இருவரும், உயிரிழந்த இளம்பெண்ணின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூற  உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற பகுதிக்குச் சென்றனர். முன்னதாக அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டதால், அங்கு செல்ல யாரையும் காவல்துறை அனுமதிக்க மறுத்து வருகிறது.

இந்த நிலையில், ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல், பிரியங்கா நொய்டா அருகே யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், அவர்களை நடந்து செல்ல முயற்சித்த நிலையில், காவல்துறையினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே ஏற்பட்ட  தள்ளுமுள்ளுவில் ராகுல்காந்தி கீழே விழுந்தார்.  அதையடுத்து,  ஊரடங்கு உத்தரவை மீறியதாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்  இது பெரும்  சர்ச்சையானது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் குதித்தனர்.

 இந்த நிலையில், இன்று மீண்டும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி  ஹத்ராஸ் செல்கிறார்கள். அவர்களுடன் காங்கிரஸ் எம்.பி.க்களும் செல்கின்றனர். ஹத்ராஸ் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க அவர்கள் இருவரும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாநில எல்லைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். பலத்த பந்தோபஸ்து போடப்பட்டு உள்ளது. காவல்துறை உயர்அதிகாரிகள் தலைமையில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர், எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

முன்னதாக  உத்தரபிரதேச பிரிவின் தலைவர் அஜய் குமார் லல்லு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூறிய அஜய் குமார் லல்லு. “மாநில அரசு என்ன மறைக்க முயற்சிக்கிறது? யாரை காப்பாற்ற விரும்புகிறது?  என்று கேள்வி எழுப்பியவர், உத்தரபிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர், மாநிலத்தில் சட்டவிரோத ஆட்சி நடைபெற்று வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.