கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலத்தின் பல புகழ்பெற்ற டாக்டர்கள் போலி டாக்டர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.  இதில் ஒருவர் ஜனாதிபதி பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதம் இரு டாக்டர்களைப் பற்றிய புகாரை ஆராய்ந்த மேற்கு வங்க போலீஸ், அவர்கள் இருவரும் போலி சான்றிதழ் பெற்று அரசுப்பணியைப் பெற்றதை கண்டுபிடித்தனர்.  இதைத் தொடர்ந்து மாநிலம் எங்கும் சோதனை நடைபெற்றது.   அதில் இதுவரை போலி சான்றிதழுடன் மருத்துவம் பார்த்த பல டாக்டர்கள் பிடிபட்டுள்ளனர்.  இதில் பல புகழ்பெற்ற டாக்டர்களும் அடங்குவார்கள்.

மேற்கு வங்கத்தின் புகழ் பெற்ற அலர்ஜி மற்றும் ஆஸ்துமா ஸ்பெஷலிஸ்ட் நரேன் பாண்டே,  அர்தீப் சட்டர்ஜி, சுபேந்து பட்டாசாரியா ஆகியோரும் போலி டாக்டர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.   இதில் சுபேந்து பட்டாசாரியா கடந்த மே மாதம், சிறந்த மருத்துவர் விருதை ஜனாதிபதி பிரமோத் முகர்ஜியிடம் இருந்து பெற்றவர்.

இது போல் இதுவரை பலர் பிடிபட்டுள்ளனர்.  மேலே குறிப்பிட்டுள்ள நரேன் பாண்டே, 12ஆம் வகுப்பில் தோல்வியுற்றவர்.  ஒரு மருந்துக்கடையில் பணி புரிந்தவர்.  பட்டாசாரியா எந்த ஒரு மெடிகல் காலேஜிலும் படிக்காமலே டாக்டர் பட்டம் வாங்கியவர்.  சட்டர்ஜி ஹோமியோபதி கல்லூரி ஒன்றில் பாதியில் படிப்பை நிறுத்தியவர்.

இது போல் பிடிபட்ட டாக்டர்கள் அனைவரும் பெயர் தெரியாத பல்கலைக் கழகம், மற்றும் மருத்துவக் கல்லூரி மூலம் சான்றிதழ் பெற்றவர்கள்.  அனைவருக்கும் தொலைதூரக் கல்வி மூலம் சான்றிதழ் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் அவற்றில் பல பல்கலைக்கழகங்கள் இயங்குவதே இல்லை.   அது தவிர மெடிகல் கவுன்சிலால் தடை செய்யப்பட்ட சில மருத்துவக் கல்லூரிகளும் இது போன்ற சான்றிதழ்களை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதில் ஹவுரா சென்ட்ரல் கல்கத்தா மெடிகல் காலேஜிலிருந்து இதுவரை சுமார் 20000 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.  இந்த காலேஜில் வகுப்புகளே நடைபெறுவதில்லை.  இது போல பல கல்லூரிகள் உள்ளன.  அவைகள் இன்னும் பிடிபடவில்லை.