ஜிஎஸ்டி: பழைய விலைக்கே பொருட்களை விற்றால் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

சென்னை,

ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ள நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது பொருட்களை பழைய விலைகளுக்கே விற்பனை செய்து வருகிறது.

இதையடுத்து பழைய விலைகளுக்கே பொருட்களை விற்பது தெரியவந்தால் நடவடிக்க பாயும் என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பல பொருட்களின் விலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து இன்னும் சரியான விவரங்கள் தெரியாத நிலையில், உணவு பொருட்களின் விலை களில் மாற்றம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில்,

ஜூலை 1-ந்தேதிக்கு முன்னரே கையிருப்பில் இருக்கும் பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் ஏற்பட்ட புதுவிலையை ஸ்டிக்கராக ஒட்ட வேண்டும்.

ஏற்கனவே அச்சிடப்பட்டிருக்கும் பழைய விலை மீது எழுதவோ அல்லது ஸ்டிக்கர் ஒட்டவோ கூடாது.

புதிய விலையை தனி ஸ்டிக்க ராக ஒட்ட வேண்டும். அப்படியானால்தான் பொதுமக்களுக்கு விலை மாற்றம் தெரியவரும்.

பொருட்களின் விலை உயர்வதாக இருந்தால் தயாரிப்பாளர் அல்லது இறக்குமதியாளர் அதுபற்றிய விபரத்தை விளம்பரப்படுத்த வேண்டும்.

கையிருப்பில் இருக்கும் பொருட்களை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் விற்பனை செய்து கொள்ளலாம்.

அதன் பிறகு சந்தைக்கு வரும் பொருட்களில் விலை விபரம் பற்றி அச்சிடப்பட்டிருக்க வேண்டும். ஸ்டிக்கரில் விலை விபரத்தை ஒட்டக்கூடாது.

தற்போது மார்க்கெட்டில் இருக்கும் ஏற்கனவே பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களுக்கான சில்லரை விற்பனை விலையை செப்டம்பர் 30 வரை மாற்றி அமைத்து கொள்ளலாம்.

அந்த பொருளில் அச்சிடப்பட்டிருக்கும் உண்மையான விலையில் இருந்து மாற்றியமைத்து ஸ்டிக்கர் ஒட்டிய விலைதான் மாற்றப்பட்ட விலை. அந்த விலைக்குதான் விற்க வேண்டும். பழைய விலைக்கே விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜி.எஸ்.டி.யால் விளைந்த விலை குறைப்பு பலன் நுகர்வோருக்கு செல்வதை தடுத்தால் அந்த நிறுவனத்தின் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கு பிறகு பழைய விலைக்கு பொருட்களை விற்பவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய அரசு சார்பில் மாவட்ட வாரியாக உயர் அதிகாரிகள் கொண்ட “நோடல்” குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


English Summary
GST Echo, Action to sell goods at old prices, Central Government Warning