டில்லி

ழாம் சம்பளக் கமிஷன் அமுலாக்கத்துக்குப் பின் ஜனாதிபதி மற்றும் உபஜனாதிபதி, ஆளுனர்களை விட அரசு அதிகாரிகளின் ஊதியம் அதிகரித்துள்ளது.

முன்பு ஒரு நகைச்சுவை பத்திரிகையில் வந்தது.  ஒருவர் தனக்கு அதிக ஊதியம் என்பதற்காக தனது பாட்டியிடம் எனக்கு கவர்னர் சம்பளம் குடுக்கிறார்கள் என்பார்.  அதற்கு அவர் பாட்டி உன் சம்பளத்தை வாங்காமல் அடுத்தவர் சம்பளத்தை ஏன் வாங்குகிறாய் என கேட்பார்.  இது நகைச்சுவையாக இருந்தாலும் அப்போது மாநிலத்திலேயே கவர்னருக்கு அதிக ஊதியம் இருந்தது.  அதே போல நாட்டிலேயே ஜனாதிபதிக்கும் அதற்கு அடுத்த படியாக துணை ஜனாதிபதிக்கும் அதிக ஊதியம் இருந்தது.  தற்போது நிலைமை மாறி உள்ளது.

கடந்த 2016ஆம் வருடம் ஜனவரி தேதியிட்டு ஏழாம் சம்பளக் கமிஷனின் ஊதிய உயர்வு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.  அதன்படி அரசின் மிக உயர்ந்த அதிகாரியான கேபினட் செகரடரியின் தற்போதைய ஊதியம் மாதத்துக்கு ரூ.2.5 லட்சங்கள் ஆகும்.   அதற்கு அடுட்த நிலையில் இருக்கும் மத்திய அரசு செகரடரியின் ஊதியம் மாதத்துக்கு ரூ,2.25 லட்சங்கள் ஆகும்.  இதே அளவு ஊதியம் ராணுவத்தின் மூன்று துறை உயர் அதிகாரிகளுக்கும் வழங்கப்படுகிறது.

ராணுவத்தின் மூன்று துறைகளுக்கும் தலைவராக விளங்குபவர் ஜனாதிபதி.   ஆனால் அவருடைய ஊதியம் மாதத்துக்கு ரூ. 1.50 லட்சங்கள் மட்டுமே.   இதே போல துணை ஜனாதிபதிக்கு ரூ.1.25 லட்சமும் கவர்னருக்கு ரூ.1.1 லட்சமும் மாத ஊதியமாக வழங்கப் படுகிறது.   அதாவது ராணுவத் தலைவரின் ஊதியம்  அவருக்கு கீழ் வேலை பார்க்கும் அதிகாரிகளை விடக் குறைவாக உள்ளது.

கடந்த 2008 வரை ஜனாதிபதியின் மாத ஊதியம் ரூ.50000 ஆகவும், துணை ஜனாதிபதியின் ஊதியம் ரூ.40000 ஆகவும், கவர்னரின் ஊதியம் ரூ.36000 ஆகவும் இருந்தது.   அதன் பின் மாற்றி அமைக்கப்பட்டது.   ஆனால் தற்போது வரை இவர்களின் ஊதியம் மாற்றி அமைக்கப்படுவதாக எந்தஒரு தகவலும் இல்லை.  ஏழாம் சம்பளக் கமிஷன் அளித்த விகிதப்படி மாற்றி அமைத்தால் ஜனாதிபதிக்கு ரூ.5 லட்சம், துணை ஜனாதிபதிக்குரூ.3.5 லட்சம் மற்றும் கவர்னருக்கு ரூ.3 லட்சம் மாத ஊதியமாக கிடைக்கும்.