மதுரை:

துரை அருகே கண்மாய்க்குள் கொட்டப்பட்டிருந்த டன் கணக்கிலான  மருத்துவக்கழிவுகளை,  தாசில்தார் தலைமையில்  பொக்லைன் இயந்திரம் கொண்டு அதிகாரகள் மீட்டு, கண்மாயை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

 

மதுரை அருகே கண்மாய்க்குள் மருத்துவக்கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிச் சென்ற நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை அருகே உள்ளது வீரபாஞ்சான் என்ற கிராமம். அந்த பகுதியில் உள்ள  17 ஏக்கர் பரப்பளவு கொண்ட வீரபாஞ்சான் கண்மாய்க்குள் மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி வருவதாக கூறப்படுகிறது. இதுவரை சுமார் 10 டன் அளவிலான மருத்துவக் கழிவுகள் அந்த கண்மாய்க்குள் மர்ம நபர்கள் கொட்டியிருப்பதாக அந்த பகுதி மக்கள் புகார் கூறினர்.

இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை, காவல் துறை அதிகாரிகள் நேரில் வந்து  ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து, மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு பொதுமக்களும் இணைந்து  ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 10டன் அளவிலான மருத்துவக்கழிவுகள் அங்கு  கொட்டப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மீட்பு பணிகளை  மதுரை கிழக்கு தாசில்தார் விஜயலட்சுமி, பொறியாளர் விஜயலட்சுமி, மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு பார்வையிட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக, விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், கண்மாய் – ல் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிய விவகாரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பிளாஸ்டிக் நிறுவனத்தின் கண்காணிப்பாளர் நவீன்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவரை தேடி வருகிறார்கள்.

-பொதிகை குமார்