டில்லி:

17வது மக்களவைக்கான தேர்தல்முடிவடைந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை தொடங்கு கிறது. இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கை மையங்களில் எதிர்க்கட்சி தொண்டர்கள்  இரவு பகலாக காவல் காத்து வருகின்றனர்.

லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 19ந்தேதியுடன் வாக்கு பதிவு முடிவடைந்த நிலையில், எக்சிட் போல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடைபெற வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்கிகள் புகார் தெரிவித்து வருகின்றன.

இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் அரசியல் கட்சிகள் தங்களது தொண்டர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

மத்தியபிரதே மாநிலத்தில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் இரவு பகலாக காவல்காத்து வருகின்றனர். இங்குள்ள போபால் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக இளம்பெண் சாமியார் பிரக்யாசிங் போட்டியிடுகிறார்.

அதுபோல, உ.பி. மாநிலத்திலும், மீரட் மற்றும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையங்களின் முன்பு  ஏராளமான காங்கிரசார் அமர்ந்து கண்காணத்து வருகின்றனர். சண்டிகரில் ஸ்டிராங் ரூம் எனப்படும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில், காங்கிரசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அசாமின் கம்ரூப் நகரில் வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு செல்லும் சாலையை காங்கிரசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் நிருபம் ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிட்டார். அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். இதுபோல நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி எதிர்க்கட்சி தொண்டர்களும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.