நாளை (20/08/2021) வரலட்சுமி விரதம்

நாளை 20/08/2021 அன்று வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்படுகிறது.

இந்துக்களின் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான ஒரு பண்டிகை வரலட்சுமி விரதமாகும். இந்த தினத்தன்று பெண்கள் தங்களின் கணவரின் ஆயுட்காலம் அதிகரிக்க லட்சுமி தேவியை வழிபடும் சிறப்பான பூஜை செய்கின்றனர்.  இது வரலட்சுமி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது.

வரலட்சுமி விரதம் தேதிநேரம்

ஆடி பௌர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வருடம் ஆவணி மாதத்தில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வருகிறது.  பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் காலை 9.15 – 10.15 வரையிலும், மாலை 4.45 முதல் 5.45 வரை நல்ல நேரமாக உள்ளது.எனவே இந்த நேரத்தில் வரலட்சுமி பூஜை செய்ய சிறந்த நேரம் ஆகும். தவிர பொதுவாக வீட்டில் விளக்கேற்றும் அந்தி சாயும் நேரத்தில் பூஜை செய்வது நல்லது.

உடல் பிரச்சினை காரணமாக சில பெண்கள் இந்த வரலட்சுமி விரதத்தை இன்று கடைப்பிடிக்க முடியாவிட்டால், அடுத்து வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் கடைப்பிடிக்கலாம்.

வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கும் முறை

தேங்காயில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு அம்மன் திரு முகத்தை வைக்க வேண்டும். அம்மன் முகம் சந்தனத்தால் செய்தோ அல்லது வெள்ளி முகம் வைத்தோ வாசலுக்கு அருகில் அம்மனை வியாழக்கிழமையான இன்று இரவே வைத்து விட வேண்டும். பின்னர் வரலட்சுமி விரதம் அன்று அதிகாலையில் குளித்து விட்டு வாசல் தெளித்துக் கோலமிட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

பின்னர் பூஜை செய்யப் போகுமிடத்தில் இழைக் கோலம் போட்டு சித்தமான ஒரு தட்டில் அட்சதையைப் பரப்பி அம்மனை ஆவாகனம் செய்யப் போகும் கலசத்தை வைக்க வேண்டும். கலசத்தினுள் அட்சதையுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள் ஒரு வெள்ளிக் காசு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழமும் வைத்து மாவிலையைக் கலசத்தின் மீது வைக்க வேண்டும். பின்னர்  அதன் மீது தேங்காயை வைக்க வேண்டும். அம்மனின் முகத்தைக் கலசத்தோடு இணைத்து வைத்து விளக்கேற்றி வெண்பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும்.

பின் பிள்ளையாருக்கு பூஜை செய்ய வேண்டும். அஷ்ட லட்சுமிகளுக்கு பிடித்தமான அருகம் புல் தூவி பூஜை செய்யலாம். பூஜையின் போது மகாலட்சுமி ஸ்தோத்திரம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஆகியவற்றைப் படிக்கலாம்.