கடலூர்: நாளை தைப்பூசத்தையொட்டி, வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதையொட்டி, இன்று சத்திய ஞான சபையில் தைப்பூச விழா கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள் வடலூரில் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூசப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தைக் காண லட்சத்துக்கும் மேற்பட்டோர் வடலூருக்குத் திரண்டுவருவர்.
இங்கு இந்த ஆண்டு 154-வது ஆண்டு தைப்பூச விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. சத்திய ஞான சபையில், இறைவன் ஒளி வடிவானவர் என்பதனை உலகிற்கு உணர்த்த மாதந்தோறும், பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும். தை மாதம் வரும் பூசநட்சத்திரத்தன்று 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ஆகையால் தைப்பூச ஜோதி தரிசன விழா இங்கு வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
இதையொட்டி, இன்று (திங்கட்கிழமை) சத்திய ஞான சபையில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முன்னதாக இன்று காலை வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லத்திலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், வடலூர் சத்திய தருமச்சாலையிலும் இன்று காலை 7.30 மணி அளவில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து காலை 10 மணி அளவில் சத்யஞானசபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.
இதையடுத்து, மருதூரில் வள்ளலார் பிறந்த இல்லம், தண்ணீரால் விளக்கு எரியச் செய்த கருங்குழி, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் சன்மார்க்க கொடியேற்றம் நடைபெற்றது. பார்வதிபுரம் பொதுமக்கள், வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட பல்லக்கை சுமந்து, பழங்கள், சீர்வரிசைப் பொருட்களுடன் ஊர்வலமாக சத்தய ஞான சபை கொடிமரத்தின் அருகே வந்தனர். அங்கு கூடியிருந்தவர்கள், ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி; தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்ற வள்ளலாரின் வாசகத்தை முழங்கி, வள்ளலாரின் கொடி பாடல்கள் பாட, சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு சத்திய ஞான சபையை வலம் வந்தது.
நாளை காலை 6 மணிக்கு முதல் காலம் ஜோதி தரிசனம் நடக்கிறது. காலை 10 மணி அளவில் இரண்டாவது ஜோதி தரிசனமும், மதியம் 1 மணி அளவில் மூன்றாவது ஜோதி தரிசனமும், , இரவு 7 மணி அளவில் 4வது ஜோதி தரிசனமும், இரவு 10 மணி அளவில் 5வது ஜோதி தரிசனமும், 12-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு 6வது ஜோதி தரிசனமும் நடைபெறும்.
இந்த ஜோதி தரிசனத்தை காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதி, அடிப்படை வசதிகள் அனைத்தும் முழுவீச்சில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
விழாவையொட்டி, மாவட்ட நிர்வாகம் மற்றும் தெய்வ நிலைய நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு இடங்களில் அன்னதானங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய தைப்பூச நிகழ்வுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தருவர் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், சிறப்பு பேருந்துகள், ரயில்கள் விடப்பட்டுள்ளன. காவல் துறை சார்பில் வடலூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்காலிக வாகன நிறுத்தங்கள், பஸ் நிறுத்தங்கள் போன்றவையும் வடலூர் நகருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில், ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தைப்பூச ஜோதி தரிசன விழா முடிந்த பின்னர், 13-ந்தேதி (வியாழக்கிழமை) மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாக மாளிகையில் திரு அறை தரிசன பெருவிழா நடைபெற உள்ளது.