சென்னை:
சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 20 குறைந்துள்ளது.

தங்கத்துக்கு நிகராக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தக்காளியை பொதுமக்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன் காரணமாக வீடுகள் மற்றும் ஓட்டல்களில் தக்காளி சம்பந்தமான உணவுகளை தயாரிப்பதை தவிர்த்தனர். மேலும் தக்காளி விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 ரூபாய்க்கு குறைவாக இருந்ததால் கிலோ கணக்கில் பொதுமக்கள் தக்காளி வாங்கிய நிலை மாறி எண்ணிக்கை அளவில் தக்காளி வாங்கி வரும் நிலை உருவானது. இதனை கருத்தில் தமிழக அரசு சார்பாக தமிழகம் முழுவதும் சுமார் 500 நியாய விலைக்கடைகளில் தக்காளியை ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

இருந்த போதும் பொதுமக்கள் தக்காளியை வெளி மார்க்கெட்டில் வாங்க முடியாத அளவிற்கு ஒரு கிலோ 200 ரூபாய் என்ற உச்சத்தை அடைந்தது. அடுத்த சில நாட்களில் தக்காளி விலை படிப்படியாக குறைய தொடங்கியது. 180, 150, 100 என விற்பனையான தக்காளி நேற்று மற்றும் முன்தினம் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினந்தோறும் 1100 டன் தக்காளி வந்த நிலையில் கடந்த ஒரு மாதமாகவே 300 முதல் 400 டன் தக்காளியே வந்தது. இந்தநிலையில் இன்று 700 டன் தக்காளி வந்ததால் ஒரு கிலோ தக்காளிக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை குறைந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் ஓரளவு நிம்மதி அடைய வைத்துள்ளது.

இந்நிலையில், நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ70க்கு விற்பனையாகிறது.