சேலம்,

மிழகத்தில் தக்காளி விலை வரலாறு காணாத அளவில் விலை சரிவு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் சோகத்துக்கு ஆளாகி உள்ளார்கள்.

தமிழ்நாட்டில், கோவை, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில்தான் தக்காளி விலைச்சல் அதிகம் செய்யப்படுகிறது. தற்போது விலை மிகவும் சரிந்துள்ளதால் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.

சேலம் மாவட்டத்தில் மேச்சேரி பகுதியில் தக்காளி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் தக்காளிக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உண்டு.

தற்போது சேலம் மாவட்டத்தில்,  மேச்சேரி, அரங்கனூர், தெத்திகிரிப்பட்டி, மல்லிகுந்தம், சாத்தப்பாடி, கூணாண்டியூர், பள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார்  600 ஹெக்டேரில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.

இங்கு சிவம், ருச்சி, பிகே1 ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில் சிவம் மற்றும் ருச்சி தக்காளி ரகங்கள் ஹெக்டேருக்கு 25 டன் முதல் 30 டன் வரை விளைச்சல் தரக்கூடியது.

ஒவ்வொரு ஆண்டு  ஜூன், ஜூலை மாதங்களில் பயிரிடப்படும் தக்காளி 120 நாள் தொடங்கி 6 மாதங்கள் வரை பலன் தரக்கூடியது.

இந்நிலையில் அண்மையில் பெய்த தெற்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காரணமாக தக்காளி விளைச்சல் அதிகமாகி சந்தைக்கு வரத்தும் அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ 25 முதல் 30 ரூபாய் வரை விற்ற தக்காளி தற்போது கிலோ 4 ரூபாய் வரை சரிந்துள்ளது. 25 கிலோ எடைகொண்ட தக்காளி பெட்டி வெறும் 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இந்த வரலாறு காணாத விலை சரிவு காரணமாக, தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த விளல சரிவு காரணமாக, விளைந்த தக்காளியை பறிக்கும் கூலி தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக சில விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே பழுத்து காய்ந்து போகும் அளவுக்கு விட்டுவிடுகிறார்கள்.

இந்த விலை சரிவு காரணமாக, சுமை தூக்குவோர், லாரி ஓட்டுனர் உள்பட விவசாயக் கூலிகள் போன்ற அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.