பொங்கல் பண்டிகை: தமிழக அரசு 12,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Must read

சென்னை,

பொங்கல் பண்டிகையை யொட்டி 11983 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னையில் தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டா தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

இதன் காரணமாக, பயணிகளின் வசதியை முன்னிட்டு பொங்கல் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. இதன்படி இந்த ஆண்டு  தமிழகம் முழுவதும் 11,983 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பொங்கலை முன்னிட்டு,  வரும் 11, 12 மற்றும் 13ம் தேதிகளில் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த 3 நாட்களில் தினமும் இயக்கப்படும் 2275 பஸ்களுடன் முறையே 11ந்தேதி  796 சிறப்பு பஸ்கள், 12ம் தேதி 1980 பஸ்கள், 13ம் தேதியன்று 2382 பஸ்கள் என மொத்தம் 3 நாட்களில் 11,983 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதேபோல், மாநிலத்தின் பிற ஊர்களில் இருந்து 11, 12, 13ம் தேதிகளில் மொத்தம் 10,437 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றும்  அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக ஜனவரி 15ந்தேதி முதல் 17ம் தேதி வரை மொத்தம் 10,595 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் முடிந்து பிற பகுதிகளில் இருந்து முக்கிய இடங்களுக்கு செல்ல அதே மூன்று நாட்களில் 7,841 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

பொதுமக்களின் வசதிக்காக, கணினி மூலம் உடனடி முன்பதிவு செய்யும் வகையில்  கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து 26 சிறப்பு முன்பதிவு கவுன்டர்களும், தாம்பரம் சானிடோரியத்தில் இருந்து 2 கவுன்டர்களும், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து ஒரு சிறப்பு முன்பதிவு கவுன்டர் என மொத்தம் 29 சிறப்பு முன்பதிவு கவுன்டர்கள் வரும் 9ம் தேதி முதல் இயங்க உள்ளது என்றும் அவர் கூறினார்.

பஸ் புறப்படும் விவரம்:

11ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆந்திரா செல்லும் பஸ்கள் அண்ணாநகர் மேற்கில் உள்ள எம்டிசி பஸ் நிலையத்திலும்,

இசிஆர் வழியாக திண்டிவனம், கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் தாம்பரம் சானிடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

பூந்தமல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

இந்த 4 தட பகுதியில் இருந்து செல்லும் பஸ்களுக்கு 11 முதல் 13ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து செல்ல ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள பயணிகள் இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து செல்ல வேண்டும்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 11 முதல் 13ம் தேதி வரை கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்குழுக்குன்றம், செங்கல்பட்டு வழியாக செல்லலாம்,

திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நெய்வேலி, திருவண்ணாமலை உள்பட பிற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

மேலும், 300 கி.மீ தூரத்துக்கு மேல் செல்லும் சிறப்பு பஸ்களில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம், கணினி மூலம் உடனடி முன்பதிவு செய்யும் வகையில் 29 முன்பதிவு மையங்களும் ஜனவரி 9 முதல் அமைக்கப்பட உள்ளன.

பேருந்து இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார்களுக்கு 044-24794709 என்ற எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

More articles

Latest article