டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை மூட தமிழகஅரசு வலியுறுத்தி வரும் நிலையில், சென்னை சூரப்பட்டு, வானகரம்  உள்பட தமிழகத்தில் 22 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ந்தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னையில் வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற முறையில் மாற்றப்பட உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில்,  தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஏப்ரல் 1ந்தேதி முதல் ஏராளமான சுங்கச்சாவடிகளில் மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை ரூ.10 மமுதல் ரூ.40 வரை உயர்த்தி NHAI (National Highways Authority of India) அறிவித்துள்ளது.

இந்த சுங்க கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 40க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பல சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்ந்துவிட்ட நிலையில், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ந்தேதி முதல்  கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

அதன்படி, சூரப்பட்டு, வானகரம், விழுப்புரம், பரனூர், சேலம் ஆத்தூர், கிருஷ்ணகிரி, திருத்தணி பட்டறை பெரும்புதூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சி புரம், சென்ன சமுத்திரம், கோவை கன்னியூர், தூத்துக்குடி சாலைப்புதூர், வேலூர் பள்ளிகொண்டா, வாணியம்பாடி, நெல்லை எட்டூர் வட்டம், கப்பலூர், நாங்குனேரி, புதுக்கோட்டை, திருச்சி சிட்டம்பட்டி, மதுரை பூதக்குடி, சிவகங்கை லெம்பலாக்குடி, லட்சுமணப்பட்டி ஆகிய 22 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.