சென்னை: தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு இரண்டு முறை சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முறையில் எந்தவொரு மாற்றமும் செய்யாமல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு மட்டுமே வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் 28 சுங்கச்சாவடிகளில் கடந்த செப்டம்பர் மாதம் சுமார் 10 சதவிகிதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த புதிய கட்டணம் ஏப்ரல் 1ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,

திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல்,

விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி,

அரியலூர் மாவட்டம் மணகெதி,

திருச்சி மாவட்டம் கல்லக்குடி,

வேலூர் மாவட்டம் வல்லம்

ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.  மாதாந்திர சுங்கச்சாவடி கட்டம் ரூ.100 முதல் ரூ.400 வரையும், ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும் உயர்த்தப்பட்டு உள்ளது.