டோக்கியோ: ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது வீரர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு (2020) நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  இந்த ஆண்டு (2021) ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும். இதையடுத்து கடந்த 13ந்தேதி டோக்கியோ  ஒலிம்பிக் கிராமம்  அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உலக நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அங்கு வருகை தந்து வருகின்றனர். போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு கொரோனா சான்றிதழ், தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில்,  டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். விளையாட்டு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த அந்த நபருக்கு நடத்தப்பட்ட சோதனையில்,   தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அதைத்தொடர்ந்து, அந்த நபர், ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் இதை டோக்கியோ 2020 தலைமை நிர்வாக அதிகாரி தோஷிரோ முட்டோ உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அந்த நபர் யார் என்பதை வெளியிட மறுத்து விட்டார்.

ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு குவியும் வீரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் 2020: உலக நாடுகளின் வீரர்களை வரவேற்க ஒலிம்பிக் கிராமம் திறக்கப்பட்டது….