முந்தைய தலைமுறைகளைவிட இன்றைய தலைமுறையினர் புத்திசாலிகளா..?

Must read

“இன்னைக்கு இருக்குற பசங்களெல்லாம் ரொம்பவும் புத்திசாலிங்களா இருக்காங்க, ரொம்ப விபரமா பேசுறாங்க… முந்தி மாதிரியெல்லாம் இல்ல… நாங்களெல்லாம் இப்புடி இருந்ததுல்ல” என்பன போன்ற வசனங்களை பலர் சொல்ல, நம்மில் பலரும் கேட்டிருப்போம்!

இப்படியான வார்த்தைகள், ஏதோ பெரிதாக கல்வி வாசனையில்லாத நபர்களிடமிருந்துதான் வருகின்றன என்றில்லை… படித்தவர்கள் என்று பட்டியலிடப்பட்டவர்களும் கூட சொல்வதுதான்!

அவர்களது கூற்றின் சாரம், கடந்த தலைமுறைகளைவிட இன்றைய தலைமுறையினர் இயல்பிலேயே அதிக புத்திசாலிகள், விவரமானவர்கள், சிந்திக்கும் திறன் படைத்தவர்கள் மற்றும் விழிப்புணர்வு கொண்டவர்கள் என்பதுதான்..!

இந்தக் கூற்று எந்தளவிற்கு உண்மை என்று முதலில் ஆய்வதைவிட, ஒரு தலைமுறையினர் புத்திசாலிகளாகவோ அல்லது மொன்னைகளாகவோ மாறுவதை தீர்மானிப்பது எது? என்பதைப் பற்றி அலசுவதே சரியானதாக இருக்கும்.

இந்த இடத்தில் நாம் எங்கும் அதிகம் தேடி ஓடாமல், நோகாமல், கம்யூனிச தத்துவத்திற்கே வந்து நிற்கலாம்! அதில் தப்பில்லை…

ஒரு மனிதனின் ஆளுமையை வடிவமைப்பதில் சூழல் என்பது மாபெரும் பங்கை ஆற்றுகிறது. அவனின் மரபணு ஒரு காரணியாக இருந்தாலும்கூட, செயலாற்றுவதற்கான பொருத்தமான களம் அமையாத பட்சத்தில், பிறப்பின் அடிப்படையிலான திறன்கள் சரியான வடிவம் பெறுவதற்கு வாய்ப்பேயில்லை.

உலகெங்கிலும் இவற்றுக்கான உதாரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு சூழல் நல்லதோ கெட்டதோ, ஒரு மனித ஆளுமையை தீர்மானிப்பதில் சூழலுக்கான பாத்திரம் என்பது அளப்பரியது. ஒரு சூழலின் மூலம் உருவாகும் ஆளுமை, வெகுமக்களுக்கான நன்மை அடையாளமாகவும் உருவெடுக்கலாம் அல்லது தீமை அடையாளமாகவும் உருவெடுக்கலாம்!

சூழல்களால் விளைந்த சில ஆளுமைகள்

* சனாதனத்தின் கட்டுப்பாடற்ற ஆதிக்கம் நிலவிய சமூகச் சூழல், புத்தர் என்ற மகா ஆளுமையை உருவாக்கியது.

* சனாதன ஆதிக்கம் பெருகி, இனக்குழு சமூகம் அழிவுற்று, அரசு அமைப்புகள் உருவான ஒரு இக்கட்டான சூழல், திருவள்ளுவர் என்ற ஒரு பேராளுமையை உருவாக்கியது.

* வைதீக தன்மை கொண்ட கொடுங்கோல் அரசு ஆதிக்கம் நிலவிய தமிழக சமூகச் சூழல், சித்தர்கள் என்ற ஆளுமைகளை உருவாக்கியது.

* நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தில் சிக்கியிருந்து விடிவுக்கு ஏங்கிய பிரெஞ்சு சமூகத்தில், வால்டேர், ரூஸோ என்ற ஆளுமைகள் உருவாயினர்.

* தங்களுக்கு(புதிதாக உருவான முதலாளி வர்க்கம்) சவால்விட்டு ஏளனம் பேசிய பிரிட்டன் நிலப்பிரபுக்களுக்கு பாடம் புகட்ட, ஆலிவர் கிராம்வெல் என்ற ஒரு ஆளுமை உருவானது.

* ஐரோப்பாவில் வலுப்பெற்ற முதலாளித்துவ சமூக அமைப்பின் கொடுமைகள் நிறைந்த சூழல், கார்ஸ் மார்க்ஸ் & ஏங்கல்ஸ் என்ற ஆச்சர்ய ஆளுமைகளை உருவாக்கியது.

* 2000 ஆண்டுகளாக நாடின்றி சுற்றித் திரிந்து அல்லல்பட்ட யூதர்களின் வரலாற்றுச் சூழல் தியடோர் ஹெர்சல் என்ற ஆளுமையை உருவாக்கியது.

* ரஷ்யாவின் மன்னராட்சி கொடுங்கோன்மைச் சூழல், லெனின் & ஸ்டாலின் என்ற ஆளுமைகளை உருவாக்கித் தந்தது.

* பாலஸ்தீனத்திலே இஸ்ரேலின் ஆதிக்கமும் ஆக்ரமிப்பும் யாசர் அரஃபாத் போன்ற ஆளுமைகளை உருவாக்கியதோடு, அங்குள்ள சிறார்களையும் ஆயுதம் ஏந்தச் செய்கிறது.

* இலங்கைத் தீவில் சிங்கள பெளத்த பேரினவாத ஆதிக்கச் சூழல், பல தமிழ் இளைஞர்களைப் போராளிகள் ஆக்கியதோடு, உலகின் மிகச்சிறந்த ஈடிணையற்ற போராளி இயக்கமாக திகழ்ந்த விடுதலைப் புலிகள் அமைப்பையும் உருவாக்கியது.

* இந்தியாவின் கர்ண கொடூர சாதிய சமூக சூழல், அம்பேத்கர் என்ற ஆச்சர்யப் போராளியை உருவாக்கியது.

* இந்திய விடுதலைப் போராட்டச் சூழல் காந்தி, நேரு உள்ளிட்ட ஏராளமான ஆளுமைகளை உருவாக்கியது.

* பிராமண ஆதிக்கம் நிலவிய தமிழகத்தின் சமூகச் சூழல், பெரியார் என்ற பேரதிசய ஆளுமையை உருவாக்கியது.

* அதே பிராமண ஆதிக்கம், தமிழகத்தில் திராவிட இயக்கம் என்ற ஒரு புத்தெழுச்சி இயக்கத்தையும் தோற்றுவித்தது.

* தமிழகத்தின் திராவிட இயக்கத் தோற்றம் மற்றும் அதன் செயல்பாட்டுச் சூழல் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட பல ஆளுமைகளை உருவாக்கியது.

* தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்டமும் பல அரசியல் ஆளுமைகளை உருவாக்கியது.

* இந்திய விடுதலைப் போராட்டம் மற்றும் திராவிட இயக்கம் ஏற்படுத்தி வைத்திருந்த சூழல் போன்றவைகளால், காமராஜர் என்ற ஒரு ஆளுமை கிடைத்தார்.

அதற்கான காரணம் இதுவா?

இன்றைய தலைமுறையினரை அதிக புத்திசாலிகள், விபரம் அறிந்தவர்கள் என்று பலரும் கூறுவதற்கான மூல காரணம், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியும், அதுசார்ந்த உபகரணங்களின் பயன்பாடுகளும்தான்! 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள்கூட செல்ஃபோன் போன்றவைகளை இயக்குவதும், சிறிய வயது சிறார்கள் கணினி உள்ளிட்டவைகளில் நிபுணத்துவம் பெற்றிருப்பதும், கடந்த தலைமுறையினரைவிட இன்றைய தலைமுறையினர் விரைவாக விஷயங்களைக் கிரகித்துக் கொள்ளும் மற்றும் சிந்தனை வேகம் கொண்ட புத்திசாலிகள் என்ற எண்ணம் கருவுற்றதற்கு காரணமாக இருக்கலாம்.

அந்தந்த காலத்தில் எவை இருக்கின்றனவோ, அவற்றை அக்காலத்திய தலைமுறையினர் எளிதாக தம்வயப்படுத்திக் கொள்வதென்பது மனிதகுல வரலாற்றில் வழக்கமான ஒன்றே!

நிலமானிய யுகமான மன்னராட்சி காலத்தை எடுத்துக்கொண்டால், 10 வயது அல்லது அதற்கு உட்பட்ட சிறார்களெல்லாம் அரியணை ஏறுவது வழக்கம். பலருக்கு அந்த வயதிலேயே போர்க்களங்கள் கூட பழக்கம்! பலர் அந்த வயதிலேயே ராஜதந்திர விஷயங்களை யூகித்து, தம் அரியணை உரிமையை வலுவாக்கிக் கொண்டதுண்டு!

ஆனால், இன்றைய அந்த வயது சிறார்களை, அப்படியான ஒரு அரசியல் புரிதலில் நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

மனிதனின் ஆதிகால வேட்டைச் சமூகங்களில், இளவயது சிறார்கள் வேட்டை நடவடிக்கைகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்றிருப்பார்கள்.

அதற்கேற்றபடி, அவர்களின் உள்ளம் மற்றும் உடல் உறுதி அந்த வயதிலேயே பக்குவப்படத் துவங்கியிருக்கும்! அத்தகைய ஒரு நிலையை, நாம் இன்றைய சிறார்களிடம் எதிர்பார்க்க முடியுமா?

பண்டைய அரேபியாவில், சிறுமிகளை வயதான ஆண்கள் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் இருந்தது. அதுவொரு மோசமான காட்டுமிராண்டி வழக்கம் என்ற விமர்சனம் நீண்டகாலமாக இருப்பதுமுண்டு. ஆனால், நவீனகால மேற்கத்திய பெண்ணிய ஆய்வாளர்கள் சிலரின் கருத்துகள் கூறுவதென்றால், அப்போதைய அரேபியச் சிறுமிகள், அதிக முதிர்ச்சியுடையவர்களாய் இருந்தனர் என்பதைத்தான். அதாவது, அப்போதைய அரேபிய சமூக நடைமுறை, அச்சிறுமிகளை அப்படியானவர்களாய் மாற்றியிருந்தன என்று நாம் எடுத்துக்கொள்ள முடிகிறது! ஆனால், அதற்காக இன்றைய அரேபியச் சிறுமிகளை நாம் அப்படி கற்பனை செய்ய முடியாது.

விரைவான செயல்முறை விஞ்ஞானம் எப்படி சாத்தியம்?

நீண்ட மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் ஏற்பட்டிராத வேகமான விஞ்ஞான வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு யுகம், கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்துதானே ஏற்படத் தொடங்கியது. அந்தவகையில் பார்த்தால், பழைய உலகின் மனிதர்களைவிட, புதிய யுகத்து மனிதர்கள்தானே புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்ற வாதமும் ஏற்படலாம்.

ஒரு சமூகத்தின் சிந்தனை வளர்ச்சி என்பது அந்த சமூகத்தின் போக்குகளை சார்ந்ததுதான். விஞ்ஞான முதிர்ச்சி சார்ந்த சிந்தனைகள் பண்டைய காலம் முதலே இருந்து வந்திருக்கின்றன. ஆனால், அவை வெடித்துக் கிளம்புவதற்கான சமூக வாய்ப்புகள் அப்போது இருக்கவில்லை. ஆனால், அத்தகைய வாய்ப்பை அளித்தது முதலாளித்துவ சமூக அமைப்புதான்!

மனிதனின் ஆரம்ப கட்ட சமூக வாழ்க்கையில், உணவைத் தேடுவதே பெரிய போராட்டமாக இருந்தது. அவனின் நேரம் முழுவதும் அதற்கே செலவான நிலையில், அவனுக்கு சிந்திப்பதற்கு வாய்ப்பே இருக்கவில்லை.

அதன்பிறகான காலப்போக்கில், காட்டு விலங்குகள் சில வீட்டு விலங்குகளாக்கப்பட்டு, விவசாயத்தில் களமிறக்கப்பட்டு, உலோகக் கருவிகள் கைகூடி வரப்பெற்று, வேலைகளை செய்ய அடிமைகளும் வாய்க்கப்பெற்ற பிறகுதான், ஆதிக்கம் செய்த குழுக்களுக்கு சிந்திப்பதற்கு நேரம் கிடைத்தது.

ஆதி பொதுவுடைமை சமூகம், ஆண்டான் அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகங்கள் ஆகியவற்றில், விஞ்ஞான வளர்ச்சியை பெரியளவில் தூண்டிவிடக்கூடிய காரணிகளோ, தேவைகளோ இருக்கவில்லை. எனவே, பலவும் சிந்தனை வடிவிலேயே தங்கிவிட்டதோடு, செயல்வடிவம் பெறவில்லை.

ஆனால், கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, நிலப்பிரபுத்துவ சமூகத்தை மீறி, அதை உடைத்துக்கொண்டு வெளியே வந்த முதலாளித்துவ சமூகத்திற்கு, தனது ஆதிக்கத்தை தக்கவைத்து, தொடர்ந்து வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் பல கண்டுபிடிப்புகள் தேவையாயிருந்தன. எனவே, முதலாளித்துவ சமூகம் விஞ்ஞான சிந்தனைகளை தொடர்ச்சியாக ஊக்குவித்துக் கொண்டே வருகிறது. அதன் விளைவுதான் இன்றைய நமது உலக நிலை!

[இஸ்லாமின் தொடக்க நூற்றாண்டுகளில், பாக்தாத்தை மையம் கொண்டு வளர்ந்த அப்பாஸிட் காலிஃப் வம்சத்தினர், தொடக்கத்தில், தங்களின் அரசியல் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்திக்கொள்ள, ‘மெட்டாஸிலி’ என்றதொரு தத்துவ மரபை ஆதரித்தனர்.

அந்த தத்துவ மரபு, மதக் கோட்பாட்டைவிட, விஞ்ஞானக் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் தருவதாகும். இதனால், அப்பாஸிட் வம்சத்தவர்கள் காலத்தில் செய்முறை விஞ்ஞானங்கள் சிறந்தமுறையில் வளர்ச்சியடைந்தன. இந்தக் காலக்கட்டத்தையே, இஸ்லாமிய உலகின் ‘அறிவியல் யுகம்’ என்று புகழ்கின்றனர்.  ஆனால், அதே அப்பாஸிட் காலிஃபேட் அரசர்கள், தாங்கள் அரசியல் ரீதியாக வலுவடைந்த பிறகு, இந்த ‘மெட்டாஸிலி’ தத்துவ அறிஞர்களை ஒடுக்கினர் என்றும் கூறப்படுகிறது.]

எனவே, நவீன வசதிகளின் அடிப்படையில், இன்றைய தலைமுறையை தனிப்படுத்தி, புத்திசாலி தலைமுறை என்று கூறினால், அதைப் பெரிய தவறு என்றுதான் சொல்ல முடியும்!

இன்றைய தலைமுறையின் தன்மைகள்!

உண்மையில் சொல்லப்போனால், இன்றைய தலைமுறை, பல அம்சங்களின் அடிப்படையில் ஒரு மந்தமான சமூகமாகத்தான் இருக்கிறது எனலாம்!

இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. முதலாளித்துவ தாராளமயத்தால் எங்கெங்கிலும் நுகர்வு கலாச்சாரம் வளர்த்து விடப்பட்டுள்ளது. அதில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையினர், சமூகம் குறித்தோ, அதில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் குறித்தோ, தமது முன்னோர்கள் எப்படியான போராட்டங்களை சந்தித்து முன்னேறி வந்தார்கள் என்பதைப் பற்றியோ தேவையான பிரக்‍ஞையற்று இருக்கிறார்கள்.

தங்களின் வர்க்க நலன்களுக்கு எதிரான சக்திகள் நைச்சியமாக செய்யும் ஆபத்தான பிரச்சாரங்களை உண்மை என்று நம்பி, சிந்திக்கும் அறிவற்று, துப்பாக்கியை திருப்பி வைத்து சுடுவதற்கு ஆயத்தமாகிறார்கள்!

சமூகநீதி இடஒதுக்கீட்டினால், படிக்கும் வாய்ப்பைப் பெற்ற அவர்கள், அந்த இடஒதுக்கீட்டையேப் பழித்துப் பேசுகிறார்கள்! தம் முன்னேற்றத்திற்காக போராடியவர்களையே தவறாக விமர்சிக்கிறார்கள்! தாங்கள் இன்று பார்த்து வாழும் இந்த சமூகம், முன்பிருந்தே அப்படியே இருந்து வந்தது என்ற ஒரு சிறுபிள்ளைத்தனமான புரிதல் அவர்களிடம் இருக்கிறது. போலிப் பிரச்சாரங்களையும் பொய்யுரைகளையும் எளிதாக நம்பக்கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆமைக்கறி, இட்லிக்கறி கதைகளுக்கு சிலாகித்து கைத்தட்டக் கூடியவர்களாக இருக்கிறார்கள்!

சந்தையில் புதிதாக என்னவிதமான நுகர்வுப் பொருட்கள் வருகின்றன மற்றும் ஜாலியாக சுற்றித் திரிவதற்கு என்னவிதமான வசதிகள் கிடைக்கின்றன என்பதில் பிரதான கவனம் செலுத்தி, அவற்றை எப்படியாவது அடையப் பெற்று பொழுதுபோக்கிக் கொண்டுள்ளனர்!

ஒரு படிப்பு, ஒரு நல்ல வேலை, போட்டித் தேர்வுகளுக்காக மனப்பாடம் செய்து வசதியான வேலைகளைப் பெறுவது, ஒரு நல்ல சம்பளம், ஜாலியான வாழ்க்கை என்பதான எண்ணங்களே அவர்களுக்குப் பிரதானம்!

அறிவைத் தேடி தொடர்ச்சியாக ஓடுவதும், படைப்புத் திறன்களை மேம்படுத்திக் கொள்வதும், எதையேனும் புதிதாக செய்ய வேண்டுமென்ற உத்வேகமும், பரவலாகப் புத்தகங்கள் வாசிப்பதும், சமூகம் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதும், நண்பர்கள் வட்டத்தில் நல்ல கலந்துரையாடல்களை மேற்கொள்வதும், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக முன்னெழுவதும், சிறந்த கலையம்சங்களை வளர்த்தெடுப்பதும் இன்றைய தலைமுறைகள் மத்தியில் மிகக் குறைவு!

அந்தத் தவறை நாமும் செய்தலாகாது..!

கடந்த 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முந்தைய தலைமுறையினர், இவர்களைவிட, மேற்குறிப்பிட்ட அம்சங்களில் மேம்பட்டவர்களாய் இருந்தனர். அதற்காக, அவர்களைவிட, இன்றைய தலைமுறையினர் புத்திக்கூர்மையில் குறைந்தவர்கள் என்று சொல்லும் தவறை நாமும் செய்தலாகாது!

இன்றைய சமூகப் போக்கும், சூழலும் அப்படியானதாய் உள்ளது. அதனால், அவர்கள் அப்படி உள்ளனர். இதில் அவர்களைப் பெரிதாக குறைசொல்ல முடியாதுதான்! பெற்றோர்களை உள்ளடக்கிய இன்றைய சமூகம், அவர்களை அவ்வாறுதான் ஆளாக்குகிறது..!

ஆனாலும், நாட்டில் வலதுசாரி இயக்கங்கள் அரசியல்ரீதியாக வலுப்பெற்று, தங்களின் ஒடுக்குமுறை அஜெண்டாவை அமல்படுத்திவரும் வேளையில், இன்றைய தலைமுறையினர் பலர், சமூக விடுதலையுணர்வு, விழிப்புணர்வு சார்ந்த சிந்தனைகள் மற்றும் அவற்றுக்காக போராடிய தலைவர்கள், மொழியுணர்வு, இன உணர்வு, சமூகநீதி இடஒதுக்கீடு குறித்த கருத்துகளைத் தேடிப் படிக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களின் சிந்தனை சிறிதுசிறிதாக விரிவடைந்து கொண்டு வருகிறது.

இது ஒரு வரவேற்கத்தக்க மற்றும் பாராட்டத்தக்க மாற்றம்..! இந்தச் சூழல் தொடரட்டும்..!

 

– மதுரை மாயாண்டி

 

 

 

More articles

Latest article