கொரோனா: புதிய உயிர்காக்கும் மருந்தைக் கண்டறிந்து ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகளை முந்திய தமிழக மருத்துவர்கள்

Must read

சமீபத்தில் ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் டெக்ஸாமெதாசோன் என்ற ஸ்டீராய்டு மருந்து நல்ல விளைவுகளைக் கொண்டிருப்பதாக கண்டறிந்து அறிவித்திருந்தனர். ஆனால், அவர்களின் அறிவிப்புக்கு இரு மாதங்களுக்கு முன்பிருந்தே தமிழக மருத்துவர்கள் மற்றொரு ஸ்டீராய்டு மருந்தான “மெத்தில்பிரெட்னிசோலோன்” மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்து சிகிச்சையில் பயன்படுத்தும் வகையில் வழிமுறைகளை வடிவமைத்து உபயோகித்து வருகின்றனர்.

 

கார்டிகோஸ்டீராய்டு டெக்ஸாமெதாசோன் குறித்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆரம்பகட்ட சோதனைகளின் முடிவுக்குப் பிறகு, அதை COVID-19 சிகிச்சைக்கு உதவும் “வராது வந்த மாமணியாக” பெரும் ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்டது.

சர்வதேச ஊடகங்கள் இதை “முதல் உயிர் காக்கும் மருந்து” என்று பாராட்டிய போதிலும், தமிழ்நாட்டின் அரசு மருத்துவர்கள் ஏற்கனவே ஆக்ஸ்போர்டை முந்தியதாகத் தெரிகிறது. ஆக்ஸ்போர்டின் ஜூன் 16 அறிவிப்பின் இரண்டு மாதங்களுக்கு முன்பே, தீவிரமான பாதிப்பைக் கொண்ட நோயாளிகளுக்கு, மற்றொரு ஸ்டீராய்டு மருந்தான  மெத்தில்பிரெட்னிசோலோனைப் (Methylprednisolone) பயன்படுத்தத் தொடங்கி சாத்தியமான நல்ல முடிவுகளைக் பெற்றுள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக, அனைவரும் உயிரைக் காக்கும் பணியில் மும்முரமாக இருந்ததால், இம்மருந்தின் மீது மேற்கொண்டு விரிவான ஆய்வுகளை நடத்தவோ, ஆய்வு முடிவுகளை உலகளாவிய ஆய்வாளர்களுக்கு வெளியிடும் பணியிலோ இறங்கவில்லை.

டெக்ஸாமெதாசோன் மற்றும் மெத்தில்பிரெட்னிசோலோன்: ஒப்பீடு

“டெக்ஸாமெதாசோன் மற்றும் மெத்தில்பிரெட்னிசோலோன் இரண்டும் ஸ்டீராய்டுகள்” என்று மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் ரகுநந்தன் தி லீடிற்கு அளித்த பேட்டியில் கூறினார். “மெத்தில்பிரெட்னிசோலோன் வேகமாக செயல்படுகிறது. இரண்டு மருந்துகளும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் அதிகப்படியான செயல்பாடுகளைக் (Inflammation) கட்டுப்படுத்தும் செயல்திறனைக் கொண்டது. நோய்த்தொற்று ஏற்படும் போதெல்லாம், நோயெதிர்ப்பு மண்டலம் சில நேரங்களில் சைட்டோகைன் (Cytokine) எனப்படும் உடனடி நோயெதிர்ப்பு செயல்பாடுகளைத் தூண்டும் வல்லமைக் கொண்ட புரோட்டீன்களை தேவைக்கு அல்லது சில சமயங்களில் தேவைக்கும் அதிகமாக உருவாக்குகின்றன. இது அதிகமாகும்போது எதிவிளைவுகளை ஏற்படுத்தி, நோயாளிக்கே ஆபத்தாக முடியலாம். எனவே, இத்தகைய சூழலில் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை நாமே கட்டுப்படத்தப்பட வேண்டியிருக்கும். இம்மருந்துகள் இரண்டும் இந்த வேலையை செய்யும் வல்லமைக் கொண்டவை,” என்றார்.

சைட்டோகைன்கள் பொதுவாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் ஒரு பகுதி என்றாலும், உடனடி செயல்பாடாக அதிக அளவில் உருவாகும்போது, நோயாளிக்கு எதிர்விளைவுகளை உண்டாக்கி தீங்கு விளைவிக்கும். இது சைட்டோகைன் புயல் (Cytokine Strome) என்று குறிப்பிடப்படுகிறது. இது தற்போதைய கடுமையான பாதிப்பைக் கொண்ட COVID-19 நோயாளிகளில் காணப்படுகிறது. எனவே, இந்த ஸ்டீராய்டு மருந்தைப் பயன்படுத்தும்போது சைட்டோகைன் புயலால் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தையும் ஆக்ஸிஜனின் பற்றாக்குறையையும் கட்டுப்படுத்துகின்றன.

“டெக்ஸாமெதாசோன் மற்றும் மெத்தில்பிரெட்னிசோலோன் உடன் பிறந்த சகோதரிகள் போன்றவர்கள். மூத்த சகோதரியை விட இளைய சகோதரியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கின்றன,” என்று சிரிக்கிறார் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் பராந்தமன். “மெத்தில்பிரெட்னிசோலோன் தங்கை போன்றவர். டெக்ஸாமெதாசோன் நீண்ட நேரம் செயல்படுகிறது மற்றும் மலிவானது. இதன் விளைவை 36 முதல் 48 மணி நேரம் வரை உணர முடியும். மெத்தில்பிரெட்னிசோலோன் ஒரு குறுகிய கால செயல்பாட்டைக் கொண்ட ஸ்டீராய்டு மற்றும் 24 முதல் 36 மணி நேரம் வரை வேலை செய்கிறது.

டெக்ஸாமெதாசோன் உடல் முழுமைக்கும் வேலை செய்யும். ஆனால், மெத்தில்பிரெட்னிசோலோன் நடவடிக்கையின் இருக்கும் நன்மை என்னவென்றால், இது நுரையீரலை இலக்காக வைத்து குறிப்பிட்டு வேலை செய்கிறது. எனவே அதிக மற்றும் விரைவான பலன் கிடைக்கும். பலருக்கு இது தெரியாது என்று நான் நினைக்கிறேன், ” என்றார் டாக்டர் பரந்தமன். கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அதன் இலக்கு சார்ந்த தேர்ந்த நடவடிக்கை காரணமாக மெத்தில்பிரெட்னிசோலோனைப் பயன்படுத்த முடிவு செய்தனர்.

“மெத்தில்பிரெட்னிசோலோனின் நன்மையை மேலும் விவரித்தால், நுரையீரலில் அதன் நடவடிக்கை டெக்ஸாமெதாசோனை விட அதிகம். டெக்ஸாமெதாசோன் உடல் முழுவதும் பரவி செயல்படும், ஆனால் மெத்தில்பிரெட்னிசோலோனில் உள்ள ஏற்பிகள் நுரையீரலை குறிவைக்கும். COVID-19-ல், நிமோனியா மற்றும் நுரையீரல் காயம் இருப்பதால், டெக்ஸாமெதாசோனுடன் ஒப்பிடும்போது மெத்தில்பிரெட்னிசோலோன் சிறந்த தேர்வாகும். இல்லையெனில் இரண்டையும் கூட உபயோகிக்கலாம். டெக்ஸாமெதோசோனின் நான்கு மி.கி மெத்தில்பிரெட்னிசோலோனின் 16 மி.கி.க்கு சமம். எனவே நீங்கள் இரண்டையும் தினசரி அளவாகப் பயன்படுத்தலாம்.

செயல்வாரியாக பார்த்தால்,  செயல்பாட்டின் ஒப்பீட்டளவில், உயர்ந்தது  எதுவும் இல்லை. மூத்த சகோதரியை விட தங்கை மிகவும் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்பதைத் தவிர, இருவரும் ஒரே மாதிரியானவர்கள் ”என்று டாக்டர் பரந்தமன் கூறினார். “செலவு மற்றும் கிடைக்கும் தன்மையை நீங்கள் கருத்தில் கொண்டால், டெக்ஸாமெதாசோன் மலிவானது மற்றும் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. அதுதான் ஒரே நன்மை.

எனவே மெத்தில்பிரெட்னிசோலோனுக்கு பதிலாக, டெக்ஸாமெதாசோனைப் பயன்படுத்தலாம். ஆனால் மெத்தில்பிரெட்னிசோலோனை விட டெக்ஸாமெதாசோனின் மேன்மை எதுவும் இல்லை, ”என்று அவர் கூறினார்.

தமிழ்நாட்டின் சிகிச்சை நெறிமுறை

மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

தமிழக மருத்துவர்களால் வடிவமைக்கப்பட்ட மருத்துவ நெறிமுறைகளே இதற்கு காரணம். தமிழகம் கடந்த இரண்டு மாதங்களாக அதன் சிகிச்சை நெறிமுறையின் ஒரு பகுதியாக இரண்டு மருந்துகளின் கலவையைப் பயன்படுத்துகிறது, இது மிகவும் அதிகப்படியான சாதகமான முடிவுகளைத் பெற்றுத் தந்துள்ளது. டாக்டர்கள் அதிக கவனிப்பு மற்றும் சிகிச்சை நெறிமுறைகளில் மேற்கொண்ட மாற்றங்களும் காரணம் ஆகும்.

“வைரஸால் நுரையீரலில் ஏற்படும் காயம் போன்ற இரண்டாம் நிலை COVID-19 நோய்த்தொற்றுகள் – இது இரண்டு மருந்துகளால் மட்டுமே தீர்க்கப்பட முடியும்” என்று கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டாக்டர் பராந்தமன் கூறினார். “இரத்தம் தடிமனாகி நுரையீரலில் உள்ள சிறிய இரத்த நாளங்களுக்குள் உறைந்து போகிறது – COVID-19 -ல் ஏற்படும் முக்கிய பிரச்சினை அதுதான்.

இதன் காரணமாக இரத்தம் ஆக்ஸிஜனை நுரையீரலுக்குள் கொண்டு செல்வதில்லை, இது ஹைஃபாக்ஸியா என்று அழைக்கப்படுகிறது. குறைந்த மூலக்கூறு எடை ஹெப்பரின் நுரையீரலில் உள்ள இரத்தக் கட்டிகளை நீக்குகிறது. இதனால் இது அதிக ஆக்ஸிஜன் கிடைக்க வழிவகுக்கிறது. இரண்டாவது நிகழ்வு (நுரையீரல்) கடினமாதல் என்பதாகும்,” என்று அவர் கூறினார். நுரையீரல் கடினமாதல் என்பது நுரையீரல் திசுக்கள் காற்றிற்கு பதிலாக திரவத்தால் நிரப்பப்பட்டிருக்கும். இது பொதுவாக காற்றோட்டமான நுரையீரலின் வீக்கம் அல்லது கடினமாதல் என குறிக்கப்படுகிறது.

“அதிகரித்த த்ரோம்போசிஸ் (இரத்தக் கட்டிகள் உருவாதல்) காரணமாக இரத்த நாளங்கள் அடைப்பு ஏற்படுவதால் ஏற்படும் நிமோனியா, இது நுரையீரலில் அதிக ஒளிபுகாநிலையை ஏற்படுத்துகிறது, இது கடினமாதல் என்று அழைக்கப்படுகிறது. இந்த கடினமாதல் நோயெதிர்ப்பு செயல்பாடுகளை அளவுக்கு அதிகமாகத் தூண்டி ஒரு அழற்சி/வீக்கம் ஏற்படுகிறது, இது நச்சுப் பொருட்களின் வெளியீட்டிற்கு வழிவகுக்கிறது, ”என்றார் டாக்டர் பராந்தமன். இந்த அழற்சி ஸ்டீராய்டு மெதில்பிரெட்னிசோலோனுடன் சிகிச்சையளிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களில் தமிழக மருத்துவர்களால் உருவாக்கி ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சை நெறிமுறை “PALM சிகிச்சை முறை” என அழைக்கப்படுகிறது. “P-என்பது வாய்ப்புள்ள நிலை (கவிழ்ந்து வயிறு அடிப்புறமாக வருமாறு படுத்துக் கொள்ளுதல் (Prone position), A – என்பது செயல்பாட்டைத் தவிர்த்தல் (Avoid activity) L-என்பது குறைந்த மூலக்கூறு எடை ஹெப்பாரின் (Low Molecular Weight Heparin), மற்றும் M என்பது மெத்தில்பிரெட்னிசோலோன்” என்று டாக்டர் பரந்தமான் விளக்கினார்.

“வாய்ப்புள்ள நிலை” – ஒரு சாதாரண விஷயமாகத் தோன்றலாம், ஆனால் இது COVID-19 சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்நிலையில் நுரையீரலில் ஆக்சிஜன் ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது. கவிழ்ந்து படுக்கும்போது நுரையீரலின் ஒரு குறிப்பிட்ட பகுதி செயல்படுத்தப்பட்டு ஆக்சிஜன் ஓட்டம் சீரடைகிறது.

COVID-19-ல் கவனிக்க வேண்டிய மற்ற மிக முக்கியமான விஷயம் செயல்பாடு. ஒரு நோயாளிக்கு அவருக்கு ஹைஃபாக்ஸியா (இரத்தத்தில் குறைந்த ஆக்ஸிஜன் அளவு) இருப்பதாக தெரியாது. ஹைஃபாக்ஸியா இருந்த போதிலும், அவருக்கு மூச்சுத் திணறல் அல்லது மார்பு வலி இருக்காது, எனவே அவர் தொடர்ந்து தனது வழக்கமான செயல்களைச் செய்வார்.

இந்த நடவடிக்கைகள் ஹைஃபாக்ஸியாவைக் அதிகரிக்க செய்து நோயாளி திடீரென மயக்கமடைய அல்லது மரணிக்க நேரிடும்.  பல நோயாளிகள் திடீரென மயக்கமடைய அல்லது மரணமடைய அதுவே காரணம். கோவிட்-19 நோயாளிகளின் திடீர் மரணம் செயல்பாடு காரணமாகவே ஏற்படுகிறது. அவர் தன்னை வழக்கமான செயல்பாடுகளில் ஈடுபடுத்தாவிட்டால், அவர் மயக்கம் அல்லது மரணத்தை தவிர்க்க முடியும். சிகிச்சை முறைகளில் செயல்படுவதைத் தவிர்ப்பதற்காக நாங்கள் A ஐ சேர்த்துள்ளோம், ”என்று அவர் கூறினார். இந்த PALM சிகிச்சையை தமிழ்நாட்டின் பேராசிரியர்கள், குறிப்பாக கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் உள்ளவர்கள் வடிவமைத்துள்ளனர்

இதற்கு முந்தைய சிகிச்சை நெறிமுறை “LAMP” என அழைக்கப்பட்டது. குறைந்த மூலக்கூறு எடை ஹெப்பரின் L, அஸித்ரோமைசினுக்கு A (ஒரு ஆண்டிபயாடிக்), மெத்தில்பிரெட்னிசோலோனுக்கு M மற்றும் பாதிப்புக்குள்ளான நிலைக்கு P. கடந்த இரண்டு மாத செயல்பாடும் உழைப்பும் அதிகரித்து வந்த COVID-19 நோயாளிகள் மரணத்தின்  மூலம் வீணாவதைக் கண்டறிந்து பின்னர், PALM சிகிச்சை நெறிமுறை உருவாக்கப்பட்டது. ” PALM சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, இதன் விளைவாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று டாக்டர் பரந்தமான் கூறினார்.

“நுரையீரல் புண், லேசான புண் போன்றவற்றைக் காணும் போதெல்லாம் நாங்கள் மெத்தில்பிரெட்னிசோலோனைப் பயன்படுத்துகிறோம். நாங்கள் உடனடியாக PALM சிகிச்சையைத் தொடங்குகிறோம். ஒரு நோயாளி நிலையானவராக இருக்கும்போது, அவருக்கு நோய் இருப்பதாகத் தெரியாது, ஆனால் குறைந்த இரத்த அழுத்தம் அல்லது குறைந்த ஆக்ஸிஜன் செறிவு (80-85% க்கும் குறைவாக) இருக்கும்போது நாம் LAMP இலிருந்து PALM க்கு மாறுகிறோம், ஆனால், நோயாளி நினைவுடனும், நோக்குடனும் இருப்பர். பின்னர் நாங்கள் அவர்களை LAMP இலிருந்து PALM க்கு மாற்றுகிறோம், ”என்று டாக்டர் பரந்தமான் விளக்கினார்.

“ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு உடனடி நோயெதிர்ப்பு செயல்பாடுகள் தூண்டப்படதற்கான சில ஆதாரங்கள் எங்களிடம் இருக்க வேண்டும்” என்று மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் டாக்டர் ரகுநந்தன் கூறினார். “சி-ரியாக்டிவ் புரதம், சீரம் செரோடோனின், இன்டர்லூகின் -6 ஆகியவவை இரத்தத்தில் உருவாகி இருப்பதை சோதித்த பின்னர், அவை அதிகமாக இருந்தால், நாங்கள் மெத்தில்பிரெட்னிசோலோனைப் பயன்படுத்துவோம்.

இவை குறித்து நிறைய ஆய்வு முடிவுகளின் தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நிபுணர் குழுக்கள் ஒவ்வொரு வாரமும் கூடி சிகிச்சையின் போக்கை தீர்மானிக்கின்றன. இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. அனைத்தும் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு நிலைகளில் 10-க்கும் மேற்பட்ட மருந்துகள் முயற்சிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்த அமைப்பைக் கருத்தில் கொண்டு, இந்த இரண்டு மருந்துகளும் மட்டுமே முடிவுகளைத் தந்துள்ளன, ” என்று அவர் விளக்கினார்.

மருந்து சோதனைகள்

உலக சுகாதார அமைப்பின் நெறிமுறையின் ஒரு பகுதியாகவும், அவர்களின் சொந்த கண்டுபிடிப்புகளாகவும் தமிழக மருத்துவர்கள் 10 மருந்துகளைப் பரிசோதித்து வருகின்றனர். இதில், நான்கு மருந்துகள் உலகளவில் நடத்தப்படும் WHO இன் உலகளாவிய ஒருங்கிணைந்த சோதனையின் ஒரு பகுதியாகும். இந்த மருந்துகள் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் ரெம்டெசிவிர், லோபினாவிர்-ரிடோனாவிர், மலேரியா எதிர்ப்பு மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் லோபினாவிர்-ரிடோனாவிர்-இன்டர்ஃபெரான் பீட்டா -1 ஏ ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்த நான்கு மருந்துகளைத் தவிர, தமிழகம் டோசிலிசுமாப் என்ற நோயெதிர்ப்பு சக்தியை மாற்றும் தன்மைக் கொண்ட மருந்தையும் பரிசோதித்து வருகிறது. ஐவர்மெக்டின் (வைரஸ் தடுப்பி), டாக்ஸிசைக்ளின் (ஆண்டிபயாடிக்), அஸித்ரோமைசின், குறைந்த மூலக்கூறு எடை ஹெப்பரின் மற்றும் மெத்தில்பிரெட்னிசோலோன் ஆகியவை சோதனையின் பிற மருந்துகள் ஆகும். “ஒவ்வொரு நாடும் பல்வேறு மருந்துகளை தனித்தனியாகவும், கூட்டாக கலவையாகவும் முயற்சித்து அறிக்கையிட்டு வருகின்றன. முறையான ஒப்புதல் பெற மெத்தில்பிரெட்னிசோலோன் மீது ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். ஆனால், எங்களுக்கு நேரமில்லை,” என்று டாக்டர் ரகுநந்தன் ஒப்புக்கொண்டார்.

டாக்டர் பராந்தமன் ஒப்புக்கொள்கிறார். “நாங்கள் உயிரைக் காப்பாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம், இப்போதைக்கு  நாங்கள் ஆய்வுகள் செய்யவோ ஆவணங்களை வெளியிடவோ நேரம் செலவழிக்க விரும்பவில்லை” என்று அவர் கூறினார். சிறப்பு!!!

Thank you: www.thelede.in

English: Sandhya Ravishankar

தமிழில்: லயா

More articles

Latest article