தூத்துக்குடி:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்று ஓராண்டு ஆகியுள்ள நிலையில், இன்று பலியானோருக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்புக்காக 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தூத்துக்குடியில் பரபரப்பு மற்றும் பதற்றம் நிலவி வருகிறது.

காவல்துறையினர் ஆலோசனை

உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த தூத்துக்கடி  ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்று வந்த போராட்டத்தின் 100வது நாளன்று மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. கடந்த ஆண்டு (2018) மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி நடைபெற்ற மாபெரும் பேரணியின்போது சில விஷமிகளில் வன்முறை தூண்டப்பட்டு, காவல்துறையினரின் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்து மூடியது. இந்த  கொடூர சம்பவம் நடந்து இன்றுடன் (புதன்கிழமை) ஓராண்டு நிறைவு பெறுகிறது.

கடந்த ஆண்டு துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட கல்நெஞ்ச காவலர்கள்

இதையடுத்து, உயிர்ழிந்தவர்களுக்கு போராட்ட குழுவினர் மற்றும் மக்கள் சார்பில் தூத்துக்குடி நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் நினைவு அஞ்சலி கூட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையும் அனுமதி வழங்கி உள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மீண்டும் பரபரப்பாக காணப்படுகிறது.

இதன் காரணமாக  தூத்துக்குடி நகர் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மேற்பார்வையில் 7 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 28 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 103 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 280 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்து 300 போலீசார் மற்றும் 6 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை உள்பட சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி சிப்காட் வளாகம், கலெக்டர் அலுவலகம், எப்.சி.ஐ. குடோன், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பகுதி, தென்பாகம் போலீஸ் நிலையம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிகள் அமைதியான முறையில் நடக்க பொதுமக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா  வேண்டுகோள் விடுத்துள்ளார்.