டில்லி

ன்று பிரதமர் மோடி தலைமையில் ஐநா பாதுகாப்புக் குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற உள்ளது.

நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில்அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. மேலும் தற்காலிக உறுப்பினர்களாக 2 ஆண்டுகாலம் 10 நாடுகள் செயல்படும். கடந்த ஜனவரி மாதம் இந்தியா தற்காலிக உறுப்பினராக பொறுப்பேற்றது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.  அதில், “பிரதமர்  மோடி தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டம் இன்று (திங்கள் கிழமை) வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொள்கின்றனர்.

இநத்க் கூட்டத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அது தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பு குறித்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா பாதுகாப்பு குழுவின் தலைமைப் பொறுப்பை சுழற்சி முறையில் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்வது வழக்கம், அதன்படி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட்டு மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது. இதனால்,  மோடி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

 இந்நிலையில், 75ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாட உள்ள நிலையில், தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஐ.நா. சபையின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பெருமிதம் தெரிவித்திருந்தார்.