IFFD
 
தீ அணைக்கும் படையினர் நாள்
ஆண்டுதோறும் மே 4ம் தேதியன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் International Firefighters’ Day (IFFD) நினைவுகூரப்பட்டு வருகிறது. தீயணைக்கும் படையினரின்   பணி துணிச்சல் மிக்கது பல நேரங்களில் ஆபத்து மிக்கதுமாகும். ஆனால், இப்படையினரின் தேவை அடிக்கடி அவசியப்படாமையினால் இவர்களின் முக்கியத்துவம் மக்களால் பெரிதாக உணரப்படுவதில்லை.
இயற்கை சீற்றங்களினாலோ, விபத்துக்களினாலோ அல்லது கலவரங்களினாலோ தீ பற்றும்போது அத்தீயினை அணைப்பதற்காக தங்களது உயிரைப் பணயமாக்கி தீப்பிழம்புகளிடையே புகுந்து போராடும் இவர்களின் சேவை அளப்பரியது. பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து இவர்கள் ஆற்றும் பணி போற்றுதற்குரியது. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய கலவர நிலைகளிலும் மேற்கத்திய நாடுகளின் காட்டுத் தீ போன்ற விபரீதங்களின்போதும், இவர்களின் செயற்பாடானது பாராட்டத்தக்கது..
இந்த அடிப்படையில் தீயணைப்புப் படையினர் சேவைகளின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதுடன், இவர்களின் பங்களிப்புகளுக்கும், அர்ப்பணிப்புகளுக்கும் மக்கள் மத்தியிலும், தேசிய மட்டத்திலும் உரிய அங்கீகாரத்தை வழங்கி இவர்களை நினைவுகூர்வது இத்தினத்தின் பிரதான நோக்கமாகும். தன்னுயிரைத் தியாகம் செய்த தீயணைப்புப் பிடையினரை நினைவுகூர்வதும் இத்தினத்தின் குறிக்கோளாகும்.
thyagarajaswami
தியாகபிரம்மம் பிறந்த நாள்
தியாக பிரம்மம் எனப் போற்றப்படும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒ0ருவரான தியாகராஜர் பிறந்த தினம் – மே 4, 1767. இவர் தென்னிந்தியாவின் ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பெற்றவர் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் பெரும்பாலும் இவரது பாடல்களே இடம்பெறுகின்றன.. தியாகராஜரின் கீர்த்தனைகளை தெலுங்கு மொழி தெரியாதவர்களும் உணர்வுபூர்மாக கேட்டு ரசிக்கிறார்கள். உலகமுழுவதிலுமுள்ள சங்கீத ரசிகர்களுக்கு சங்கீதம் என்றால் அது தியாகராஜருடைய சங்கீதம்தான்.
அப்படி இவருடைய பாடல்களில், மனங்கவரும் காரணம் என்ன என்பதை குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் அவரது பாடல்களில் அடங்கியிருக்கும் பக்தி ரஸமும், பாடல்களின் பொருளும், அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கிற இராகங்களுமே காரணம் என்றால் அது மிகையல்ல.
மாணிக்கவாசக சுவாமிகள் பக்தி ரசம் சொட்டச் சொட்ட சிவபெருமானை அழுது புரண்டு மனம் உருகப் பாடியதைப் போல, தியாகராஜ சுவாமிகளும் அவரது இஷ்ட தெய்வமான இராமனை, சீதாபிராட்டியை அவர்கள் வரலாற்றில் காணப்படும் பல நிகழ்ச்சிகளைச் சொல்லிச் சொல்லி பக்தி ரசத்தோடு பாடியிருப்பதும் அந்தப் பாடல்கள் உயிரோட்டத்தோடு மிளிர்வதற்குக் காரணங்களாகும்.
Tipu_Sultan_BL
 
திப்புசுல்தான் மறைவு
1799 – வருடம் இதே நாளில்தான்,  நான்காம் மைசூர்ப் போர்: திப்பு சுல்தான் பிரித்தானியப் படையினரால் கொல்லப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டணம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.
நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தானின்அமைச்சர்கள் மீர் சதக் மற்றும் பூர்ணய்யா விலை போய் மைசூர் கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்டன. ஹைதராபாத் நிஜாமின் கடல் போன்ற படையோடு ஆங்கிலேயர் சேர்ந்த ஐம்பதாயிரம் பேர் படையை முப்பதாயிரம் பேர் கொண்ட படையோடு எதிர்கொண்டு போராடி திப்பு சுல்தான் வீர மரணம் அடைந்தார்.
“ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் அண்டிப்  பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வீரம் காட்டி மடியலாம்” என்று தான் சொன்னபடியே தப்பித்து ஓடாமல் போரில் தீரம் காட்டி இறந்தார் அவர். போரில் எண்ணற்ற இழப்புகள்,சூறையாடல்கள் எல்லாம் நிகழ்ந்த அந்த கணத்தில் ஒரு ஒப்பற்ற தலைவன் இறந்து போனதற்காக மைசூர் மக்கள் கண்ணீர்விட்டு அழுதார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்கிறார்கள். வீர வரலாறு ஒன்று முடிவுக்கு வந்தது . திப்பு எனும் மாவீரன் மறைந்த நாள் இன்று (மே நான்கு )
மத நல்லிணக்கத்துக்கு அற்புதமான எடுத்துகாட்டு திப்பு சுல்தான். – நூற்றி ஐம்பத்தாறு இந்து கோயில்களுக்கு அவரது ஆட்சியில் மானியம் வழங்கப்பட்டு வந்தது . எந்த அளவுக்கு அவரின் ஆட்சியில் மத நல்லிணக்கம் நிலவியது என்பதற்கு இந்த தகவலே போதுமானது. கோயில்களுக்கு செலவிடப்பட்ட 2,33,959 ரூபாயில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 அளிக்கப்பட்டது இவர் ஆட்சியில்,சிருங்கேரி மடத்தலைவருடன் நெருங்கிய உறவு பாராட்டினார் . மூன்றாம் மைசூர் போரில் பரசுராம் பாவ் எனும் மராத்தியர் தலைமையிலான படைகள் நாசப்படுத்திய சிருங்கேரி ஆலயத்தை சீரமைத்துக்கொடுத்தார்.