என். சொக்கன்
a
பொதுவாழ்வில் இயங்குகிறவர்களுக்கும் நேர்மை அவசியம்.
நேர்மை என்பது, நேர்த்தன்மை என்பதைக்குறிக்கும் பண்புப்பெயர். அதாவது, நேர்வழியில் செல்வது, குறுக்குவழியில் செல்லாமலிருப்பது.
பொதுவாகத் தமிழில் பண்புப்பெயர்கள் எல்லாமே மை என்றுதான் முடியும், வெண்மை, தண்மை, செம்மை, சிறுமை, பெருமை, இனிமை என்று பல உதாரணங்களைச் சொல்லலாம். இவை அனைத்தும் ஒருவருடைய (அல்லது, ஒரு பொருளுடைய) பண்புகளைக் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்: வெண்மையான சட்டை, தண்மையான பானம், செம்மையான மனிதர், சிறுமையான நடத்தை, பெருமையான நடத்தை, இனிமையான பேச்சு… அதுபோல, நேர்மையான தலைவர்.
இங்கே ‘நேர்மை’ என்பது பண்பு, ‘தலைவர்’ என்பது, அதைக் கொண்டிருக்கும் நபர், அவரைப் ‘பண்பி’ என்பார்கள், அதாவது, பண்பைக் கொண்டிருப்பவர்/கொண்டிருப்பது. நடுவில் வரும் ‘ஆகிய’/’ஆன’ என்பதைப் பண்பு உருபு என்பார்கள், அதாவது, பண்பை வெளிக்காட்டும் உருபு.
இந்த உருபு மறைந்து வருவதும் உண்டு. அப்போது அதனைப் ‘பண்புத்தொகை’ என்பார்கள், அதாவது, பண்பைக் குறிப்பிடும் உருபு தொக்கிநிற்கிறது/மறைந்திருக்கிறது.
உதாரணமாக, செந்தமிழ் என்ற சொல், செம்மையான தமிழ் எனப் பிரியும், அதில் ‘ஆன’ என்ற பண்பைக் குறிப்பிடும் உருபு மறைந்துள்ளதால், இது பண்புத்தொகை.
பொதுவாகப் பண்புத்தொகை என்பது ஒரு பண்பையும் ஒரு பெயரையும்தான் சேர்க்கும், ஆனால், இதில் சிறப்புப்பிரிவாக, ‘இருபெயரொட்டு பண்புத்தொகை’ என்பதும் உண்டு. அதாவது, ஒரு பெயர்களை ஒட்டுகிற பண்புத்தொகை.
இந்த இரு பெயர்களில் ஒன்று சிறப்புப்பெயராகவும், இன்னொன்று பொதுப்பெயராகவும் வரும். உதாரணமாக: பலா மரம்.
இங்கே பலா என்பது சிறப்புப்பெயர் (ஒருவகை மரம்), ஆனால் மரம் என்பது பொதுப்பெயர், இவை சேர்ந்து வரும்போது, ‘பலா ஆகிய மரம்’ என்கிற பொருளைத்தருகிறது, மரத்தின் பண்பை (அது பலா மரம் என) உணர்த்துகிறது. ஆகவே இதனை ‘இருபெயரொட்டு பண்புத்தொகை’ என்பார்கள்.
இதற்கு இன்னும் சில உதாரணங்கள்: காலை நேரம், நடிகர் ரஜினிகாந்த்!
(தொடரும்)