நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்…
காங்கிரஸ் அரசை எதிர்த்து திராவிட இயக்கம் அரசியல் போர் நடத்திய போது அது பயன்படுத்திய மிகப்பெரிய ஆயுதம் திரைத்துறை..
அந்தத் திரைத்துறையில் மிகப்பெரிய வெற்றியை பெற்று அதை பயன்படுத்தி அரசியலிலும் மிகப்பெரிய சாதனையைப் படைத்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்.
மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு எம்ஜிஆர் அமரும் அளவுக்கு அவரை கொண்டு சென்ற தத்துவப் பாடல்களில் பெரும்பாலானவற்றை பாடியது பின்னணி பாடகர் டி எம் சௌந்தரராஜன்தான். திரைத்துறையை தாண்டி, அரசியல் மாற்றத்திற்கும் டிஎம்எஸ் ஒரு கருவியாக அமைந்தார் என்பதை மறுக்கவே முடியாது.
நம்மைப் பொறுத்தவரை,
இன்றளவும் பிடித்த நம்பர் ஒன் பின்னணி பாடகர் என்றால் டிஎம் சௌந்தரராஜன்தான்..
அந்த இசை மேதை எப்படி நம்முள் நுழைந்து இருக்கிறான் என்று யோசித்து யோசித்து பார்த்தால்,
அழகிய தமிழ் மகள் இவள்.. பாடலும், நான் பாடும் பாடல் நீ நலமாக வேண்டும் பாடலும் மாறி மாறி வந்து போகின்றன..
சிறுவயதில் முணுமுணுத்தாலே டிஎம்எஸ் பாடல்தான்..
“பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ”
“காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்”
“கல்யாண பொண்ணு கடை பக்கம் போனா”
“நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்”
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
“பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து.”
1970களின் தொடக்கத்தில் டிஎம்எஸ் நம்முள் புகுந்தார் என்பதைவிட கலந்தார் என்றே சொல்லவேண்டும்..
டிஎம்எஸ்சையெல்லாம் வெறும் பின்னணிப் பாடகராக மட்டுமே பார்க்கும் மனோபாவம் நமக்கில்லை.. இந்தப் பிறப்பில் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம். எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை தாலாட்டும் காதுகளுக்கு கிடைத்த இனிமையான வாழ்வியல். உச்சபட்ச சந்தோஷங்களில் டிஎம்எஸ் குரல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ரீவைண்ட் செய்து பார்த்தால் எவ்வளவு எவ்வளவு அற்புதமான நினைவுகள், தருணங்கள்..
அதிகாலை. பேருந்து நிலைய பக்கம் சென்றால், டீக்கடைகளில் ஊதுவத்தி மணக்கும். கடவுள் படங்களுக்கு பூமாலை தொங்கும்..
வெப்பமற்ற அந்த குளுமையான சூழலில், காதுகளில் மெதுவாக பாயும்…..உள்ளம் உருகுதய்யா முருகா உன் எழில் காண்கையிலே..என….. இன்னொரு கடையில் கற்பனை என்றாலும் சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன். என பாடும்.
அழகென்ற சொல்லுக்கு முருகா..
புல்லாங்குழல் கொடுத்த மூங்கல்களே என எல்லாக்கடைகளிலும் பெரும்பாலும் ஒலிப்பது டிஎம் சௌந்தர்ராஜன் பாடிய பக்திப்பாடல்களே..
கோவில்களில் அவர் பாடல்கள் ஒலிக்கும் என்பதை விட வியப்பான அம்சம், டிஎம்எஸ் பாடும் டீக்கடைகள்கூட தெய்வாம்சம் வாய்ந்த கோவில்களாக மாறிவிடும் என்பதுதான்..
எம்கேடி பாகதவர் பியுசின்னப்பாவும் கோலோச்சிய 1940கள் காலகட்டங்களில் சினிமா வாய்ப்பு என்பது மதுரையைச்சேர்ந்த டிஎம்எஸ்சுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது.
1946ல் கிருஷ்ணவிஜயம் படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. பெரிதாக பேசப்படாமல் 1950ல் எம்ஜிஆர் நடித்த மந்திரிகுமாரி படத்தில் ஒரேயொரு பாடல்..அட பரவாயில்லையே என்று இசையமைப்பாளர்கள் நினைத்துவைத்தனர் அவ்வளவுதான்..
தமிழ்சினிமா வரலாற்றில் அதகளமான ஆண்டு என்று சொன்னால் அது 1954 ஆம் ஆண்டுதான்.
நக்கல்பாணி படங்களுக்கெல்லாம் இன்றளவும் தலைநகராக திகழும், எம்ஆர்.ராதாவின் ரத்தக்கண்ணீர், எம்ஜிஆர் சிவாஜி இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி, கலைஞர்-சிவாஜி காம்பினேஷனில் வசனகாவியமாய் திகழ்ந்த மனோகரா, எம்ஜிஆரை சூப்பர் ஸ்டார் ஆக்கிய மலைக்கள்ளன் வரிசையில் இன்னொரு படம் சிவாஜி நடித்த தூக்குத்தூக்கி.. எல்லா பிளாக் பஸ்டர்களுமே அந்த ஆண்டில்தான் வெளிவந்தன..
இரண்டாண்டு முன்பு ‘’இந்த பையன் ரொம்ப ஒல்லியாக இருக்கிறான் இவனை தூக்கினால்தான் படம் தேறும்’’ என்று புதுமுக சிவாஜி விஷயத்தில் ஏவிஎம் செட்டியார் முரண்டுபிடித்தார்.
கூட்டுத்தயாரிப்பாளரான வேலூர் நேஷனல் தியேட்டர் அதிபர் பி.ஏ பெருமாள் முதலியார், நன்றாக நடிப்பதுடன் நம்மை மலைபோல நம்பியிருக்கும் இந்த பையன் இல்லாவிட்டால் படமே தேவையில்லை என்று மல்லுக்கு நின்றார். சிவாஜி கணேசன் பிழைத்தார்.. இரண்டு வருடங்களில் வரலாறு மாறுகிறது
சிவாஜி பல படங்களில் நடித்து முன்னணி நடிகராகி விட்டார். அவரது தூக்குத்தூக்கி படத்தில் டிஎம்எஸ்சை பாட வைக்க, தமிழின் நெம்பர் ஒன் இசையமைப் பாளரான ஜி.ராமநாதன் முயற்சிக்கிறார்..
ஆனால் பிரபலம் இல்லாத புதுஆள் வேண்டாம் என்று நிராகரிக்கிறார்.. ஆனால் ஜி.ராமநாதன் மல்லுக்கு நிற்கிறார். மாதிரிக்கு ஒரு பாடலை டிஎம்எஸ் பாடிக்காட்ட சிவாஜி வேண்டா வெறுப்பாய் தலையாட்டுகிறார்.
படத்தின் எல்லா பாடல்களையும் டிஎம்எஸ் பாடுகிறார்..
ஏறாத மலைதனிலே குட்டி ஜோரான கௌதாரி ரெண்டு… என உச்சஸ்தாயில்..
அதே வகையில் பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே என்ற இன்னொரு பாடல்.. எட்டு பாடல்களை டிஎம்ஸ்சே பாடினார்.
எல்லாவற்றையும்விட கண் வழி புகுந்து கருந்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம் என்ற டூயட் பாடல்தான் கிளாசிக் ரகத்தில் அமைந்தது..
தனியாக பாடும்போது உச்சஸ்தாயில் பாடும் டிஎம்ஸ், காதலில் குழையும் பெண் குரலோடு இணைந்தால், அவரின் குரலில் அப்படியொரு மென்மைக்கு போய்விடுவார் என்று பொட்டில் அறைந்தார் போல் சொல்லிய பாடல் அது.
இன்னொரு பக்கம் மலைக்கள்ளனில், எம்ஜிஆருக்காக பாடிய எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் என்ற பாடல், டிஎம்எஸ்சுக்கு..அதைப்பற்றி சொல்லித்தான் தெரியவேண்டுமா?
டிஎம்எஸ்சின் குரல் தெய்வீகம் என்பதை மற்றவர்கள் எல்லோரையும்விட இசை ஜாம்பவான் ஜி.ராமநாதன் தான் அதிகம் நம்பினார்.
அதனால்தான் அவர் இசையமைக்கும் படத்தில் ஆண் தனியாக பாடும் பாடல்களை டிஎம்எஸ்க்கு அவ்வளவு அற்புதமான உருவாக்கி அழகு பார்த்தார்.
காத்தவராயனில், வா, கலாப மயிலே ஓடிநீ வா கலாப மயிலே.. சதாரம் படத்தில் நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே, சிவகாமியில், வானில் முழு மதியை கண்டேன் போன்ற பாடல்களை லட்சம் தடவை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது.
இரண்டு மூன்று வாத்தியங்கள், ஒரேயொரு டிஎம்எஸ் குரல்.. தமிழ் சினிமா உலகின் மேஜிக் ரகங்கள் அவை.. வெளிப்படையாக சொன்னால், மனுஷங்களாடா நீங்க ரெண்டு பேரும்? என்று ஜி.ராமநாதனையும் டிஎம்எஸ்சையும் பார்த்து கேக்கலாம்..
எம்ஜிஆர் சிவாஜிக்கு டிஎம்எஸ் குரல்தான் நிரந்தரம் என்று முடிவான பிறகு, இருவரில் டிஎம்எஸ்சை இசையமைப்பளாரையும் தாண்டி, கனக்கச்சிதமாக தனக்காக மட்டுமே அப்படியொரு கம்பீரமான பாடல் அமைய வேண்டும் என்று தத்துவபாடல்களை டிஎம்எஸ்க்கு அள்ளிஅள்ளி கொடுத்தார்.எம்ஜிஆர்..
தாய்க்குபின் தாரம் படத்தின் மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே..நாடோடி மன்னன் டைட்டில் சாங்கான செந்தமிழே வணக்கம், மன்னாதி மன்னனின் அச்சம் என்பது மடமையடா, அரசிளங்குமரியின் சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளுடா, திருடாதே படத்தின் திருடாதே பாப்பா திருடாதே என டிஎம்எஸ் பாடல்கள், தியேட்டர்களையும் தாண்டி, சோர்வுறும் ஒவ்வொரு தமிழன் நெஞ்சிலும் புத்துணர்ச்சியை ஊட்டின.
அதேசமயத்தில் காதல் பாடல்களிலும் டிஎம்எஸ் தன் தனித்தன்மைகளை விதவிதமாக காட்டினார்.
மதுரை வீரனில், நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே..என்று டூயட் பாட ஆரம்பிக்கும் போது. தியேட்டரே உற்சாகத்தில் மிதக்கும்.
சிவாஜிக்காக சாரங்கதாராவில் வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே, அதே ரகம்தான்.
யாராடி நீ மோகினி கூறடி என் கண்மணி..
கட்டித்தங்கம் வெட்டியெடுத்து
சட்டி சுட்டதடா கைவிட்டதா புத்தி கெட்டதடா
படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தான்
யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
இதுபோன்ற பாடல்கள், கதவுகளே இல்லாத கிராமத்து டெண்ட் கொட்டகைகளில் இரவுநேரங்களில ஓடும்போது சுற்றுவட்டாரத்தில் வீடுகளில் உறங்கும் மக்களின் காதுகளில்கூட டிஎம்எஸ் குரல் ரீங்காமிடும்.
எம்ஜிஆர் சிவாஜி மட்டுமல்ல ஜெமினி எஸ்எஸ்ஆர் அடுத்த தலைமுறை ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், நாகேஷ், ஏவிஎம் ராஜன் அதற்கு அடுத்த தலைமுறை கமல் ரஜினி சத்யராஜ் வரை டிஎம்எஸ் பாடித்தள்ளினார்.
இளைஞனாகி 1970ல் கமல் சினிமா உலகில் ரீஎண்ட்ரி ஆன போது அவருக்கு பாடிய முதல் குரல் டிஎம்எஸ்தான்.
1975 பட்டாம்பூச்சி படத்தில் 21 வயதான ஹீரோ கமலுக்கு சர்க்கரை பந்தலில் தேன் மழை பொழியுது என்று பாடி மெகா ஹிட் தந்தவர் டிஎம்எஸ்தான். அதே படத்தில் எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி என்ற பாடலும் செம ஹிட்..
அன்றைய காலத்தில் அந்த படத்தின் பாடல்களை விவிதபாரதி ஒலிபரப்பாத நாட்களே கிடையாது..
கமலுக்காக தாயில்லாமல் நானில்லை படத்தில் டிஎம்எஸ் பாடிய வடிவேலன் மனசை வெச்சான் மலரை வெச்சான்..என்ற டூயட் எவ்வளவு தெறி ஹிட் என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.
ரஜினி முதன் முதலில் கதாநாயகனாக நடித்த பைரவி படத்தில் டிஎம்எஸ்தான் அவருக்காக இரண்டு பாடல்களை பாடி மெகா ஹிட் தந்தார்.
டி.ராஜேந்தரின் ஆரம்பகால படங்களில்கூட, என் கதை முடியும் நேரமிது,… அமைதிக்கு பெயர்தான் சாந்தி என வரிசையாக கலக்கினார்.
எல்லா காலகட்டத்திற்கும் எல்லாருக்கும் பாடும் திறன்கொண்ட அற்புதமான பாடகர் டிஎம்ஸ்..
நினைத்து பாருங்கள்..கீழ்வானம் சிவக்கும் படத்தில் டிஎம்எஸ் பாடிய கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான் என வயதான காலத்தில் நடித்தபோதும் சிவாஜி எவ்வளவு கச்சிதமாக பொருந்தியது
பக்திப்பாடலோ சினிமா பாடலோ, தமிழ்நாட்டில் காலையில் விழிக்கும் ஒருவர், உறங்கச்செல்வதற்கு முன், மறைந்துபோன அந்த டிஎம்எஸ்சின் குரலை ஏதாவது ஒரு இடத்தில் காதில் வாங்காமல் போகவே முடியாது..
ஏனெனில் அவன் வெறும் கலைஞன் அல்ல,..காற்றாய் வியாபித்திருப்பன்.
ஈடு இணையே இல்லாத பின்னணி பாடகர், நடிகர் வாழ்வாங்கு வாழ்ந்து 91 வயதில் மறைந்த இசை மேதை டிஎம் சௌந்தர்ராஜனின் 99வது பிறந்த நாள் இன்று (மார்ச் 24) இன்னும் ஒரு படி மேலே சொன்னால் அவரின் நூற்றாண்டு துவக்கம்.. அந்த மாபெரும் கலைஞனுக்கு திரை உலகம் மற்றும் சமூகம் என்ன பெருமை சேர்க்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.