இன்று புரட்டாசி மகாளய அமாவாசை. இன்றைய தினம் மறைந்த நமது முன்னோர்களின் ஆசிகள் வேண்டிய தர்ப்பணம் செய்யும் நாள். ஆனால், இன்றைய தினம், தமிழகஅரசு கொரோனாவை காரணம் காட்டி, மக்கள் முக்கிய ஸ்தலங்களிலும், நீர் நிலைகள் உள்ள பகுதிகளிலும் தர்ப்பணம் செய்வதற்கு தடை விதித்துள்ளது.

மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. அதனால் தான் முன்னோர்களை திருப்தி செய்ய ஒவ்வொரு அமாவாசை அன்றும் தர்ப்பணமும், மற்றும் அவர்களின் இறந்த தினத்தன்று திதி கொடுப்பதும் செய்து வரப்படுகிறது. அமாவாசை மாதா மாதம் வந்தாலும் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்றும் தர்ப்பணம் செய்ய மற்றும் திதி கொடுக்க மிகவும் உகந்த நாட்களாகும். இந்த மூன்றிலும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்வது நல்லது.
மகாளயம் என்பது ஆவணி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல் புரட்டாசி அமாவாசைக்கு முதல் நாள் வரை வரும் இரு வார காலம் ஆகும். அந்த நாட்களில் முன்னோர் மறைந்த திதி அன்று தர்ப்பணம், திதி கொடுத்தல் ஆகியவை செய்வது மிகவும் நல்லது.
இந்த மகாளய பட்சத்தில் முன்னோர்கள் பூவுலகில் சஞ்சரிப்பதாக ஐதீகம் உள்ளது. அதனால் அந்த நாட்களில் திதி கொடுப்பது அவசியம். அப்படி திதி கொடுக்க முடியாதவர்கள் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து திதி கொடுக்கலாம். முடிந்தால் ஏதேனும் புனித நதியில் நீராடி முன்னோர் கடமையை முடிப்பது நல்லது. மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்ய உகந்த புண்ணிய தலங்கள் கங்கை நதிக்கரை, ராமேஸ்வரம், பம்பை நதிக்கரை மற்றும் பல இடங்கள். முடியாதவர்கள் உள்ளூரில் உள்ள இடங்களிலும் மூத்தோர் கடமைகளை முடிக்கலாம்.
நமது வாழ்வில் வரும் இன்பங்கள், இன்னல்கள் யாவும் நாம் எமது முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப அமைகிறது. அதில் பித்ருக்களுக்கான காரியமும் ஒன்றாகும். எனவே, முன்னோர்களின் ஆசிகளை முழுமையாக பெற சிரத்தையுடன் அவர்களுக்கான காரியங்களை செய்ய வேண்டும். அதில் தவறினால் பித்ருக்களின், அதாவது முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாவோம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.
மகாளய அமாவாசையையொட்டி நாளை கோவில்களில் தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை! பொதுமக்கள் அதிருப்தி