சென்னை: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்காளர்கள் பூத் சிலிப், வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், மற்ற 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி இன்று (6ந்தேதி) முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2வது கட்ட வாக்குப்பதிவு வரும் 9ந்தேதி நடைபெற உள்ளது. =

இந்த தேர்தலில் 24,416 பதவிகளுக்கு 80,819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 5 முதல் 6 மணிவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், கரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குச் சீட்டுகள் அல்லது வாக்காளர் அடையாள அட்டை   இல்லாதவர்கள், மாநில தேர்தல்ஆணையம் அனுமதித்துள்ள 11 அடையாள ஆவணங்களான ஆதார் அட்டை, 100 நாள் வேலைஉறுதி திட்டப் பணி அட்டை,புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகம், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை (PAN Card), தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, இந்திய கடவுச்சீட்டு (Indian Passport), புகைப்படத்துடன் கூடியஓய்வூதிய ஆவணம், மத்திய,மாநில அரசு, அரசு பொதுத்துறைநிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை,எம்.பி., எம்எல்ஏக்களுக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.

தேர்தலையொட்டி,  பாதுகாப்பு பணியில் 17,130 காவல் துறையினர், 3,405 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.