சென்னை: மகாளய அமாவாசையையொட்டி நாளை தமிழகம் முழுவதும் கோவில்களில் தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிகழ்வுக்கு  தமிழகஅரசு மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

ஆண்டுக்கு ஒருமுறை வரும் மகாளய அமாவாசை தினத்தன்று, மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் வழக்கமாகும். அதன்படி நாளை மகாளய அமாவாசை வருகிறது. அன்றைய தினம் முன்னோர்களுக்கு திதி கொடுத்துவிட்டு, அருகே உள்ள நீர்நிலைகளில் நீராடி, கோவில்களுக்கு சென்று வணங்கி வருவார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனாவை காரணம் காட்டி,  மாநிலம் முழுவதும் மகாளய அமாவாசை தரிசனம் மற்றும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக கொரோனாவை காரணம் காட்டி, தமிழக  வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் கோவில்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிமறுத்து வருகிறது. ஆனால், தற்போது மகாளய அமாவாசை தினத்தன்றும் அனுமதி மறுக்கப்பட்டுள்ள செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம், மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் குளம் உள்பட அனைத்து கோவில்களின் திருக்குளங்களிலும்  தர்ப்பணம் கொடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். அங்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட இடங்களில் புனித நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தீர்த்த தலமான ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், சேதுக்கரை தீர்த்தம், தேவிப்பட்டினம் தீர்த்தம், சாயல்குடி மாரியூர் கடற்கரை ஆகிய இடங்களில் நீராடவும், தர்ப்பணங்கள் செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கோடியக்கரை கடற்கரையிலும் பக்தர்கள் புனித நீராட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆறு பாயும் வாங்கல், நொய்யல், வேலாயுதம்பாளையம், நெரூர் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் புனித நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோவில் அருகே திறந்தவெளி மைதானத்தில்  தர்ப்பணம் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கம்பம் அருகே உள்ள சுருளி ஆற்றங்கரை, கோபால சமுத்திர கரை, பழனி சண்முகா நதி ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை.

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மாசாணியம்மன், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன், பேரூர் பட்டீஸ்வரர், மருதமலை முருகன் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி தாமிரபரணி படித்துறைகளில் திதி மற்றும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.  10-ந்தேதி வரை 6 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கும், படித்துறைகளில் திதி, தர்ப்பணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் தரங்கம்பாடி, பூம்புகார் கடற்கரைகளில் தர்ப்பணம் கொடுக்கவும் பொதுமக்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில், கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு இன்று முதல் 2 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் கடற்கரையிலும் தர்ப்பணம் கொடுக்க தடை விதித்துள்ளனர்.

திருவையாறு அய்யாரப்பர் கோவில், காவிரி படித்துறை, கும்பகோணம் பகவத் படித்துறை ஆகிய இடங்களில் தர்ப்பணம் கொடுக்க தடை விதித்துள்ளனர்.

கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் ஏராளமானவர்கள் திரண்டு தர்ப்பணம் கொடுப்பார்கள். அங்கு இன்றுமுதல் பொது மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் தர்ப்பணம் செய்ய தடைவிதித்துள்ளனர்.

இது மாநில அரசின் ஒருசார்பிலான நடவடிக்கை என பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  ஊராட்சி தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் ஒவ்வொரு பகுதிகளில் வாக்கு சேகரிப்பு என்ற பெயரில்  கூடுகின்றனர், அதற்கு தடை விதிக்காத அரசு,  4ந்தேதி நடைபெற்ற கிராமை சபை கூட்டத்திலும் ஏராளமான கட்சியினர்  கூட்டம் கூட்டமாக கலந்துகொண்டனர். அதற்கு அனுமதி அளித்த அரசு, இந்துக் களின் முக்கிய தினமான,  மகாளய அமாவாசை அன்று, முன்னோர்களுக்கு செய்யும் பரிகாரங்களை கூட செய்ய முடியாத அளவுக்கு தடை விதித்துள்ளது கண்டனத்துக்கு உரியது என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.