டெல்லி: பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது  வெட்கக்கேடானது – சட்டவிரோதமானது என உ.பி. மாநில பாஜக அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம்  லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தில் கார் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்ததை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது. இதையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில், லக்கிம்பூர் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அவர்மீது உ.பி. காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக பிரியங்கா காந்தி உள்ளிட்ட 11 பேர் மீது உத்தரப்பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், பிரியங்கா காந்தி கைது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளதில்,  சட்டத்தின் பல விதிகள் மீறப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் சட்டம் & ஒழுங்குக்கு வேறு அர்த்தம் இருப்பதாக தெரிகிறது. அதாவது, சட்டம் என்றால், அம்மாநில முதல்வர் ஆதித்யநாத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு என்றால் ஆதித்யநாத்தின் உத்தரவு என்று விமர்சித்துள்ளார்.

மேலும்,  நேற்று அதிகாலை 4:30 மணியளவில், சூரிய உதயத்திற்கு முன், ஒரு ஆண் போலீசாரால் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். இது  அரசியலமைப்பு உரிமைகளை முற்றிலும் மீறிய செயல். இது முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும்  வெட்கக்கேடானது.

இவ்வாறு கூறியுள்ளார்.