சென்னை,

அ.தி.மு.க.வின்  ஓபிஎஸ், இபிஎஸ்  அணிகளை இணைப்பதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக உடைந்தது. அதன் காரணமாக அதிமுகவின் சின்னம் இரட்டை இலையை தேர்தல் கமிஷன் முடக்கியது.

அதைத்தொடர்ந்து  பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் அ.தி.மு.க.வில் பிளவுப்பட்ட 2 அணி களையும் இணைப்பதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது.

இரண்டு  அணிகளையும் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி  (ஓபிஎஸ்) சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும், அ.தி.மு.க. அம்மா அணி (எடப்பாடி அணி)  சார்பில் ஆர். வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

பேச்சு வார்த்தையின்போது என்னென்ன நிபந்தனைகளை முன்வைக்கவேண்டும் என்பது தொடர்பாக 2 அணியினரும் தனித்தனியாக தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனால் கட்சி, ஆட்சி அதிகாரத்தில் இருந்து சசிகலா குடும்பத்தினை வெளியேற்றவேண்டும் என்பதில் தான் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் விடாப்பிடியாக உள்ளனர்.

இரட்டை இலை சின்னம் இல்லாமல் உள்ளாட்சி தேர்தலை சந்தித்தால் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், 2 அணிகளும் இணைந்து சின்னத்தை மீட்கவேண்டும் என்பதே தொண்டர்களின் கருத்தாக உள்ளது.

அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா மற்றும் அ.தி.மு.க. அம்மா ஆகிய 2 அணிகளையும் இணைப்பது தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

 

 

பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை நடைபெறும் சமயத்தில் 2 அணிகளையும் சேர்ந்த தொண்டர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளக்கூடாது என்பதற்காகவும், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களால் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.