தூத்துக்குடி:

கேன்சர் போன்ற கொடிய நோய்களை உருவாக்கி வரும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று 53வது நாளை எட்டி உள்ளது.

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் இணைந்து பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆலைக்கு எதிரான அவர்களின் போராட்டம் இன்று 53வதுநாளாக தொடர்ந்து வருகிறது.

பொதுமக்களின் இந்த தன்னிச்சையான  போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும், மாணவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், போராடி வரும் அ.குமரெட்டியாபுரம் மக்களுக்கு ஆதரவாக, பண்டாரம் பட்டி , வடக்கு சங்கரப்பேரி, தெற்கு வீரபாண்டியபுரம், மீளவிட்டான், மடத்தூர்  ஆகிய கிராம மக்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

இதன் காரணமாக ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.  மேலும் அருகிலுள்ள கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட  இருப்பதாக  அ.குமரெட்டியாபுரம் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழுவினர், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனால் அச்சம் அடைந்துள்ள மாவட்ட போலீசார், எங்களது போராட்டத்தை ஒடுக்க முயற்சி செய்து வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.

ஆனால், நாங்கள் அதற்கு  அஞ்சமாட்டோம். எங்களது போராட்டம் தொடரும் என்றும் எங்களது போராட்டதுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் திரளுவார்கள் என்றும், இந்த போராட்டம் விரைவில்  மாநிலம் தழுவிய போராட்டமாக மாறும் என்றும் கூறினார்.