சென்னை:

தியாகராய நகரில் போக்குவரத்து காவலர்களை  தாக்கியதாக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம்.

சென்னை சாலிக்கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது தாய் சங்கீதாவையும், சகோதரியையும் இரு சக்கரவாகனத்தில் அழைத்துக்கொண்டு தி.நகர்  பகுதிக்கு பொருட்களை வாங்குவதற்காக வந்தார்.  தன் இரு சக்கர வாகனத்தை ஓட்டும்போது தலைக்கவசம் அணியாமலும் ஒரே இரு சக்கர வாகனத்தில் விதிமுறைகளுக்கு மாறாக மூவராக பயணம் செய்ததாலும் காவல்துறையினர் அவரது வாகனத்தைத் தடுத்து நிறுத்தி, அபராதம் கட்ட சொன்னார்கள்.

அப்போது பிரகாஷ், காவல்துறையினரிடம் அடாவடியாகப் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து பிரகாசையும் அவரது தாயாரையும் காவலர்கள் கடுமையாகத் தாக்கினர்.

இதை செல்போனில் வீடியோ எடுத்த சிலர், சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். இக்காட்சி வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே தங்களை தாக்கியதாக பிரகாஷ் மீது வழக்கு பதிந்து காவலர்கள் சிறையில் அடைத்தனர். இன்னொரு பக்கம், இது குறித்து தானாக முன்வந்து மனித உரிமை ஆணையம் விசாரிக்க ஆரம்பித்தது.

இந்தநிலையில் இளைஞர் பிரகாஷூக்கு ஜாமீன் அளித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.