ன்று மகா சிவராத்திரி. இன்றைய தினம், ஆதியும் அந்தமுமாய் இருக்கும் சிவபெருமானை தரிசித்து ஆசி பெறுவது சகல செல்வங்களை யும் தரும் என்பது நம்பிக்கை.

மகாசிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். நினைத்த காரியம் நடக்கும் என்பது  பக்தர்களின் அசைக்க முடியாத நம்பக்கை.  சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். மகாசிவராத்திரி நாளில் இரவெல்லாம் கண் விழித்து சிவபெருமானை வழிபட வேண்டும். இதனால் இறைவன் அருள் கிடைப்பதோடு நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.

சிவனுக்கு உகந்த சிவராத்திரி ஏன்?

உலகத்துக்கு ஆதியும் அந்தமுமாய் இருப்பவர், சிவபெருமான். பிரளய காலத்தில் ஜீவன்கள் எல்லாம் அவருள் ஒடுங்கிவிடும். ஆனால் எப்போதும் சிவனை விட்டுப் பிரியாதவளாக சக்தி மட்டும் இருப்பாள். அப்படி ஒரு பிரளயம் வந்து உலக உயிர்கள் எல்லாம் சிவனிடம் ஒடுங்கி விட்டன. அண்டத்தில் எதுவுமே இல்லை. புல், பூண்டு, பூச்சிகள் என எதுவுமே இல்லாத வெறுமை. எங்கும் எப்போதும் பேரமைதி. அன்னைக்கு இந்த நிலை பிடிக்கவில்லை. குழந்தைகள் இல்லாத வீடு எந்தத் தாய்க்குத்தான் பிடிக்கும்? அதனால் கருணையே வடிவான உலகன்னை,  மீண்டும் உலகத்தில் உயிர்கள் தோன்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் சிவனை பூஜித்தாள். அந்த பூஜைக்கு மனமிரங்கிய எம்பெருமானும் மீண்டும் உயிர்களையும் ஈரேழு பதினாலு உலகங்களையும் படைக்க உத்தரவிட்டார்.

அப்போது பார்வதிதேவி, தான் ஈசனை நினைத்து பூஜைகள் செய்து வழிபட்ட காலம் சிவனுக்குரிய காலமாகப் போற்றப்பட வேண்டும் என்றும், அன்று சிவனை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டுவது கிடைக்க அருள்புரிய வேண்டும் என்றும் வேண்டினாள். சிவனும் அவ்வாறே அருளினார். அந்த நாளே சிவராத்திரி என்று சிவ மகா புராணம் சொல்கிறது. பார்வதி தேவியைத் தொடர்ந்து சனகாதி முனிவர்களும், நந்தியும் சிவராத்திரி விரதமிருந்து தாங்கள் விரும்பியதைப் பெற்றதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

சிவராத்திரிகளில் 4 வகை உள்ளது. ஒன்று மாதந்தோறும் வரும்  மாத சிவராத்திரி (அல்லது நித்திய சிவராத்திரி), இரண்டாவதாக பட்சராத்திரி, மூனாவதாக யோக சிவராத்திரி, நான்காவவதாக மஹாசிவராத்திரி.

மாத சிவராத்திரி என்பது என்ன?

ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை சதுர்த்தசி, மற்றும் தேய்பிறை சதுர்த்தசி தினங்கள் மாத சிவராத்திரிகளாகும். அப்படிப் பார்க்கும் போது ஒரு வருடத்திற்கு இருபத்து நான்கு மாத சிவராத்திரிகள் உள்ளன.

பட்ச சிவராத்திரி என்பது என்ன?

தை மாதம் தேய்பிறை பிரதமையில் ஆரம்பித்து பதின்மூன்று நாட்கள், மிகுந்த கட்டுப்பாட்டுடன் ஒரு பொழுது மட்டுமே உணவு உண்டு, சிவனை பூஜித்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து, பதினான்காவது நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருந்து மறுநாள் விரதத்தை முடிப்பது பட்ச சிவராத்திரி ஆகும்.

யோக சிவராத்திரி என்பது என்ன?

24 மணி நேரமாகப் பகுக்கப்பட்டிருக்கும் ஒரு நாளை நம் முன்னோர்கள் 60 நாழிகையாகப் பிரித்தார்கள். சூரிய உதயம் முதல் இரவு வரை அமாவாசைத் திதி இருந்தால் அன்று யோக சிவராத்திரி. மேலும், திங்கட்கிழமை இரவு முழுவதும் தேய்பிறை சதுர்த்தசி திதி இருந்தால் அதுவும் யோக சிவராத்திரி என்று சொல்லப்படும். அதே போல திங்கட்கிழமை இரவு நான்காம் ஜாமத்தில் அமாவாசைத் திதி அரை நாழிகைப் பொழுதேனும் இருந்தால் அதுவும் யோக சிவராத்திரியாகக் கொள்ளப்படுகிறது. சிவனுக்கு உகந்தது திங்கட்கிழமை (சோமவாரம்) என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது. யோக சிவராத்திரியின் போது விரதம் இருந்து பூஜை செய்தால், அது மூன்று கோடி மற்ற சிவராத்திரி விரதம் இருந்த பலனுக்கு சமம் என்பது ஐதிகம்.

மகா சிவராத்திரி என்பது என்ன?

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வருவது மஹா சிவராத்திரி ஆகும். அன்றைய தினம் உலகம் முழுவதும் உள்ள எல்லா சிவாலயங்களிலும் நான்கு கால பூஜைகள் விசேஷமாக நடக்கும். அடியார்கள் அனைவரும் விரதமிருக்கலாம். இந்த சிவராத்திரி விரதத்துக்கு யாரும் விலக்கு இல்லை. யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

சிவராத்திரி விரதம் இருக்கும் முறை:

சிவராத்திரி விரதம் இருக்க விரும்புபவர்கள் அதிகாலையிலேயே தூய நன்னீரில் நீராடி, தூய உடை உடுத்தி நெற்றியில் நீறணிந்து, சிவனுக்குரிய மந்திரமான ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபிக்க வேண்டும். பின்னர் கோயிலுக்குச் சென்று நாலு கால பூஜை யிலும் கலந்து கொள்ள வேண்டும். பகலில் கண்டிப்பாக உறங்கக் கூடாது. இரவு கண் விழிப்பதற்காக டி.வியோ, சினிமாவோ பார்க்கக்கூடாது. சிவனை நினைத்து அவரது திருநாமங்களை சிவா, பவா, ருத்ரா, பசுபதி, பரமேஸ்வரா, விடைவாகனா, நீலகண்டா, மஹேஸ்வரா, விருபாக்ஷõ, சம்ப, சூலபாணி, திகம்பரா, பிறைசூடா, உக்ரா, மகாதேவா எனப் பாராயணம் செய்யலாம். சிவ புராணம் படிக்கலாம். வில்வத்தால் லிங்கத்திற்கு அர்ச்சனை செய்யலாம். அன்று முழுவதும் தண்ணீர்கூட குடிக்கக் கூடாது என்பது நியமம். இயலாதவர்கள் கோயிலில் கிடைக்கும் பிரசாதங்களை சிறிது உண்டு, பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உண்ணாமல் இருப்பதுதான் சிறந்தது.

சிவராத்திரி அன்று நடைபெறும் 4 கால பூஜைகளின் சிறப்பு:

முதல் காலம்: இந்தக் காலத்தில் சிவன் சோமஸ்கந்த ரூபத்தில் வணங்கப்படுகிறார். அப்போது அவருக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் நடக்கும். அது முடிந்ததும் களபம் சாத்தி (சந்தனப் பூச்சு) செய்து சிவப்பு பட்டு வஸ்திரம் சாத்துவார்கள். பச்சைப் பருப்பு கலந்த வெண் பொங்கல் நிவேதனம் செய்வார்கள். பழங்களில் வில்வம் பழம் முதல் கால்தில் நிவேதனம் செய்யப்படுகிறது. ரிக் வேத பாராயணம் நடைபெறும். விளக்கெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவர். அதோடு மாணிக்க வாசகரின் சிவபுராணமும் ஓதப்படும். ஸ்வாமிக்கு திருநீற்றுப் பச்சிலை, தாமரை, அரளி போன்ற மலர்களை சமர்ப்பிப்பர்.

இரண்டாம் காலம்: இரண்டாம் காலம் மௌன குருவான தட்சிணாமூர்த்தி ரூபம். பல பழங்களைப் பாலோடு சேர்த்து பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வார். அப்போது பச்சைக் கற்பூரக் காப்பு, மஞ்சள் பருத்தி ஆடை சாற்றப்படும். பாயசமும், லட்டும் நிவேதனமாகப் படைக்கப்படும். பலாப்பழம் இந்தக் காலத்துக்கு உரியது. யஜுர் வேத பாராயணம் நடைபெறும். அதோடு தாமரையும், வில்வமும் சமர்ப்பிக்கப்படும். இலுப்ப எண்ணெய் தீபம் ஏற்றப்படும். ருத்ர தாண்டகம் என்ற திருத்தாண்டகம் ஓதப்படும்.

மூன்றாம் காலம்: இந்தக் காலத்தில் சிவன் லிங்கோத்பவ ரூபியாக ஆராதிக்கப்படுகிறார். இறைவனுக்குத் தேனால் அபிஷேகம் செய்து, அகில் காப்பு சாத்துவார்கள். வெள்ளைக் கம்பளி ஆடையாக சாத்தப்படும். நிவேதனமாக சத்து மாவும், பாயசமும் படைக்கப்படும். மாதுளம் பழமும் இந்த பூஜைக்கு உரியது. சாம வேதப் பிரியனான சிவனுக்கு சாம வேதத்தைப் பாராயணம் செய்வது இந்தக் காலத்தில்தான். நெய்விட்டு கும்ப தீபம் ஏற்றப்படும். அறுகம்புல்லும் தாழம் பூவும் சமர்ப்பிக்கப்படும்.

தாழம்பூ இந்த நாளில் மூன்றாம் காலத்தில் மட்டுமே இறைவனுக்கு சாத்தப்படும். வேறு எந்த சமயத்திலும் எந்த நாளிலும் அந்தப் பூ சிவ பூஜையில் பயன்படுத்தப்படுவதே இல்லை. லிங்க புராண திருக்குறுந்தொகை ஓதப்படும். மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவ ரூபியாக சிவன் வணங்கப்படுவதால், லிங்கத்துக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அதே நேரம் கருவறைக்குப் பின்னால் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கும் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அவருக்கு நெய் பூசி வெந்நீரால் அபிஷேகம் செய்து கம்பளி ஆடை அணிவிப்பர். ஸ்ரீ ருத்ரம், சமகம் போன்ற துதிகளை பாராயணம் செய்வர். சிவ சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து பொரி உருண்டை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்யப்படும். நான்காம் காலம்:

நான்காம் காலம்:  சிவஸ்வரூபமாகவே லிங்கம் வழிபடப்படுகிறது. அப்போது கரும்புச்சாறு அபிஷேகம் செய்து கஸ்தூரிக் காப்பு சாத்தப்படு கிறது. பச்சை வண்ண மலர்களே ஆடையாக அணிவிக்கப்படும். கோதுமை, நெய், சர்க்கரை சேர்த்த உணவினை நிவேதனம் செய்வர். அதர்வண வேத பாராயணம் நடைபெறும். நல்லெண்ணெய் விட்டு மகா மேரு தீபம் ஏற்றப்படும். எல்லா விதமான மலர்களும் கலந்து சமர்ப்பிக்கப்படுகின்றன. அப்பர் அருளிய திருத்தாண்டகம் ஓதுவர். விரதம் இருப்பவர்கள் நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு பூஜைகளை கண்ணாரக் கண்டு உமாமகேசனை உளமார நினைத்து வழிபட வேண்டும்.

இந்த நான்கு கால பூஜை முடிந்தவுடன் சற்று நேரத்தில் உஷத் கால பூஜைகள் நியமப்படி நடக்கும். அதோடு உச்சிக்கால பூஜையையும் சேர்த்து முடித்து விடுவார்கள். பக்தர்கள் வீடு வந்து சிறிதுநேரம் அமர்ந்த பின்னர் நீராடி பஞ்சாட்சரத்தை ஜபித்து திருநீறு அணிந்து யாராவது ஒரு வறியவருக்கு உணவிட்டு தானும் உண்ண வேண்டும். அதுவே விரதத்தை முடிக்கும் முறை.

அவ்வாறு செய்தால் எல்லா ஞானமும் சித்தியும் கை வரப்பெறுவதோடு அவர்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பெண்கள் சிவராத்திரி விரதமிருந்து பூஜை செய்தால் மிகச் சிறந்த கணவன் வாய்க்கப் பெறுவார்கள். மணமான பெண்கள் விரதமிருந்தால் கணவனுக்கு நீண்ட நோய் நொடியற்ற வாழ்நாளும், புத்திரர்களுக்கு நல்ல படிப்பும் சேர்க்கையும் கிடைக்கும். மனை சிறக்கும். மங்களங்கள் பெருகும். இந்த ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி (10.03.2013) மகா சிவராத்திரி. அன்று நியமப்படி விரதமிருந்து சிவனை வணங்கி அவன் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரர் ஆவோம். விரும்பிய அனைத்தையும் பெற்று வளமோடு வாழ்வோம்.

ஓம் நமச்சிவாய!

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி