புதுக்கோட்டை,

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான நெடுவாசல் மக்களின் போராட்டம் இன்று101வது நாளை எட்டியுள்ளது. மக்கள் இன்னும் வீரியமுடன் போராடி வருகின்றனர்.

ஆனால், இதுவரை மத்திய மாநில அரசுகள்,  மக்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு இருப்பது மாநிலம் முழுவதும் உள்ள மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் திட்டமிட்டே மீத்தேன், ஷெல் கேஸ், ஹைட்ரோ கார்பன் திட்டம், ஓஎன்ஜிசி எண்ணை கிணறு போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நெற்களஞ்சியமான தஞ்சை பகுதி நாசமாக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 110 இடங்களில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதியில் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வாணக்கன் காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிவாயுவை தங்கள் பகுதியில் எடுக்கக் கூடாது என மக்கள் கூறி வருகின்றனர்.

இந்த திட்டங்கள் செயல்படுத்துவதாலும், அதிருந்து வெளியேற்றப்படும் எண்ணைக் கழிவுகளா லும் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி, அந்த பகுதி மக்கள், மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்தியஅரசின் இந்த திட்டங்களை, தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என்று உதட்டளவில் கூறி வரும் தமிழக செயல்படாத அரசு, மத்தியஅரசுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்துக்கொண்டு, மக்களின் போராட்டத்தை தடுக்கவே முயற்சித்து வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற  முதற்கட்டமாக போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் போராட்டம் நடத்திய பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் புதுக்கோட்டை உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதியில் எரிவாயு எடுக்க மீண்டும் அனுமதி அளித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதனை அறிந்த நெடுவாசல் மக்கள் மீண்டும் 2-ம் கட்டமாக போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஏப்ரல் 12-ந் தேதி முதல் போராட்டம் தொடங்கியது.

பல்வேறு வகையான நூதன போராட்டங்களை நடத்தி  வருகின்றனர். அவர்களின் போராட்டம் நேற்று செஞ்சுரி அடித்தது. நேற்றைய போராட்டத்தின்போது இயக்குனர் கௌதமன், விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், நடிகர் மயில்சாமி உள்பட அரசியல் கட்சியினரும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இன்று 101வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெறும் வரை ஓயமாட்டோம் என்று மக்கள் தெரிவித்தனர்.

ஒரு மாநிலத்தில், மக்களின் வாழ்வாதரத்திற்கு எதிரான பிரச்சினையில் பொதுமக்கள் 100 நாட்களை கடந்தும் போராடி வரும் நிலையில், தமிழக அரசு எந்தவித மேல்நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது.

மத்திய அரசின் மிரட்டலுக்கு பயந்து, ஊழல் புகாரில் சிக்கிய உள்ள மாநில அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள்  தங்களின் அரசையும், பதவியை காப்பாற்றிக்கொள்ளவே தங்களின் முழு கவனத்தை யும் செலவழித்து வருகின்றனர்.

இதன் காரணமாகவே தமிழர்களின் ஒவ்வொரு பாரம்பரிய உரிமையும் தொடர்ந்து திட்ட மிட்டே பறிக்கப்பட்டு வருகிறது.

இதே நிலை இன்னும்  நீடித்தால் தமிழகம் விரைவில் பாலைவனமாகி விடும்…. விவசாயம் அடியோடு ஒழிந்துவிடும்….. விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும்…. என்று மாறும் இந்த இழிநிலை….

தமிழக அரசு விழிக்குமா?