சென்னை

ன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்து உள்ளது.

இன்று  தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

மேலும் நாளை முதல் வரும் 10 ஆம்தேதி  வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை 6 செ.மீ., ஓசூர், சூளகிரி, சின்னார் அணை தலா 5 செ.மீ., முண்டியம்பாக்கம், கெலவரப்பள்ளி அணை தலா 4 செ.மீ., ஏற்காடு, சின்னக்கல்லார், வானூர், கோலியனூர், தளி, வளவனூர், மூங்கில் துறைப்பட்டு, மேட்டூர், கேதார், விழுப்புரம், சூரப்பட்டு, சோலையார் தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.