சென்னை
இன்று சென்னையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடிநீர் ஏடிஎம்களை திறந்து வைக்கிறார்
பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மையான குடிநீர் வழங்கும் புதிய திட்டத்தை சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. அதன்படி கடற்கரை, பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சந்தைப் பகுதிகள் என மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்.கள் நிறுவப்பட்டுள்ளது.
இவ்வாறு நிறுவப்படும் ஒவ்வொரு ஏ.டி.எம்.மிலும் 150 மில்லி லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் என இரண்டு அளவுகளில் குடிநீர் பெற்றுக் கொள்ள முடியும். தாங்கள் கொண்டு வரும் தண்ணீர் பாட்டில்களில் பொதுமக்கள் சுத்தமான நீரைப் பிடிக்கலாம். இந்த அதிநவீன நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் முன் வடிகட்டுதல், ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் மற்றும் புற ஊதாக் கதிர்கள் ஆகியவற்றைக் கொண்டு தேசிய தரத்திற்கு இணையான தூய்மையான நீரை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவை 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும். நீர்இருப்பு இல்லாத நிலையிலும் கடவுச்சொல் மூலம் நீரை ரீசார்ஜ் செய்யும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. கடைசி 50 முறை ரீசார்ஜ் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் விவரங்களையும் பயனர்கள் பார்க்க முடியும். இந்த விநியோக அமைப்பு பேட்டரி மூலம் இயங்குவது கூடுதல் சிறப்பாகும்.
இதற்கான கட்டண வசூலில் துல்லியத்தன்மையை உறுதி செய்வதற்காக ஸ்மார்ட் கார்டு மற்றும் நாணயங்கள் பயன்படுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீர் ரீசார்ஜ் மற்றும் விநியோகம் தொடர்பான தகவல்கள் குறுஞ்செய்தி மூலம் பயனர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.
இதில் முதற்கட்டமாக 50 குடிநீர் ஏ டி எம் கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 50 குடிநீர் ஏ.டி.எம்.களை மெரினா கடற்கரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.