சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ராமநாதபுரம் சுற்றுப்பயணத்துக்காக இன்று மதுரை செல்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளையும், நாளை மறுநாளும் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். எனவே அவர் இன்று மாலை சென்னையிலிருந்து விமானத்தில் மதுரை செல்கிறார் அவர் விமான நிலையத்தில் இருந்து காரில் மதுரை முனிச்சாலை பகுதிக்கு வருகிறார்.
அங்கே மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் நிறுவப்பட்ட பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ரிங்ரோடு பகுதியில் உள்ள ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை 10 மணி அளவில் கார் மூலம் ராமநாதபுரம் புறப்படுகிறார்.
அந்த மாவட்ட எல்லையான பார்த்திபனூர் பகுதியில் இருந்து ராமநாதபுரம் வரை 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
முதல்வர் மு க ஸ்டாலின் மதியம் 1 மணி அளவில் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் தங்கும் விடுதிக்கு வந்து மாலை 4 மணி அளவில் ராமநாதபுரம் அருகே பேராவூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடைபெறும் தென்மண்டல அளவிலான தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
பிறகு ராமேஸ்வரம் சென்று அங்குள்ள தனியார் விடுதியில் இரவு தங்குகிறார். அடுத்த நாள் காலை 10 மணி அளவில் மண்டபம் கலோனியல் பங்களா அருகில் நடைபெறும் மீனவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, மீனவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.
முதல்வர் கலந்துகொள்ளும் விழாவுக்காக ராமநாதபுரம் அருகே பேராவூர் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் மண்டபம் பகுதியில் நடைபெறும் மீனவர்கள் மாநாட்டுக்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
[youtube-feed feed=1]