சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்படும் நிலையில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட உள்ளன.

கோடை விடுமுறை காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் மூடப்பட்டிருந்தது.  இன்று அதாவது ஜூன் முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.   தற்போது கொரோனா அச்சுறுத்தலால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் உயர்நீதிமன்றம் இயங்க உள்ளது,  ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காணொலி மூலம் மட்டுமே விசாரணைகள் நடைபெற்று வந்தன.

ஒரு சில வழக்குகளில் வழக்கறிஞர்கள் நேரடி விசாரணைக்கு கோரிக்கை விடப்பட்டு அதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.   இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்த நேரடி விசாரணை தடைப்பட்டது.   மே மாதம் முதல் கோடை விடுமுறை காரணமாக நீதிமன்றம் மூடப்பட்டது.  விடுமுறைக் கால நீதிமன்றம் மட்டுமே இயங்கி வந்தது.

விடுமுறைக்கால நீதிமன்றத்தில் ஆக்சிஜன், தடுப்பூசி, ரெம்டெசிவர் மருந்து ஆகியவற்றின் பற்றாக்குறை குறித்த செய்திகளின் அடிப்படையில் தலைமை நீதிபதியின் அமர்வு விசாரணை நடத்தியது.  இந்த வழக்கு விசாரணை கோடை விடுமுறைக் காலத்தில் வாரத்துக்கு இரு தினம் நடந்தது.   இந்நிலையில் இன்று கோடை விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் இயங்க உள்ளது.

தற்போது தலைமை நீதிபதி அமர்வு உள்ளிட்ட மூன்று அமர்வுகள் தனியாக மூன்று நீதிபதிகள் என 9 நீதிபதிகள் மட்டுமே செயல்பட உள்ளனர்.  இதைப் போல் மதுரைக் கிளையில் 2 அமர்வுகள் மற்றும் நீதிபதிகள் என 7 நீதிபதிகள் மட்டுமே செயல்பட உள்ளனர்.  எனவே வரும் 11 ஆம் தேதி வரை அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட உள்ளன.