சென்னை

ன்று தமிழகத்தில் புதிய டிஜிபி மற்றும் தலைமை செயலர் பதவி ஏற்கின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாகத் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு பணியாற்றி வந்தார். இன்று பணியில் இருந்து ஓய்வு பெறுவதால் புதிய காவல்துறை டி.ஜி.பி.யாக சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை புதிய காவல்துறை ஆணையராக காவல்துறை அகாடமி டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பு ஏற்கிறார். இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னையின் 108-வது காவல்துறை ஆணையராக சங்கர் ஜிவால் பதவியேற்றார். 2 ஆண்டுகள் இப்பணியில் சிறந்து விளங்கிய அவர் சிரித்த முகத்துடன் பேசுவார். அவர் தமிழில் பேசுவதைக் கேட்கவே இனிதாக இருக்கும். ஆயினும் பணியில் கண்டிப்பானவர். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை பாயும்.

இன்று தமிழ்நாட்டின் புதிய காவல்துறை டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொள்கிறார். சைலேந்திரபாபு அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு விடை பெறுவார். சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை சைலேந்திரபாபுக்கு வழி அனுப்பு விழா நடைபெறுகிறது.

இதைப் போல் தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலாளராக தற்போது நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளராக உள்ள சிவ்தாஸ் மீனாவை நியமித்து, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு நேற்று அறிவித்தார். இறையன்பு ஓய்வுபெறும் நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்கிறார்.