இன்று 20. 10. 2021 புதன்கிழமை – அன்னாபிஷேகம்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இன்று புதன்கிழமை மட்டுமல்ல. புதனுக்குரிய ரேவதி நட்சத்திர நாள். பௌர்ணமி கூட. ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் தான் நினைவுக்கு வரும் இந்த அபிஷேகத்தைச் சேவித்தால் நாட்டிலும் சரி வீட்டிலும் சரி சாப்பாட்டுக்குப் பஞ்சம் வராது என்பார்கள்.ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.சந்திரன், பூமிக்கு மிக அருகில், முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம். அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

அன்று அனைத்து சிவாலயங்களிலும் ‘அன்னாபிஷேகம்’ நடை பெறும். லிங்கத்திருமேனியாக இருக்கும் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்படும். மாலையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, இறைவனின் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தைச் சாத்துவார்கள். பிறகு இறைவனுக்குத் தீபாராதனை செய்யப்படும். இறைவனின் திருமேனியில் உள்ள அன்ன அலங்காரத்தைக் களைந்து, அதில் சிறிதளவு அன்னத்தை எடுத்து லிங்கம்போல் செய்து பூஜிப்பார்கள். அதை எடுத்துக் கொண்டுபோய், ஊரில் உள்ள குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம். வேறு தானத்தில் திருப்தி இருக்காது. அன்னதானத்தில் திருப்தி இருக்கும்.‘‘போதும், போதும்” என்று சொல்ல வைக்கும். உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும். அப்படிப்பட்ட அன்னத்தை தனக்கானதாக மட்டுமே வைத்திருப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களால் இறையருளைப் பெற முடியாது என்பது உண்மை. இந்த உண்மையை உணர்த்தவே கோயில்களில் அன்னாபிஷேகம் நடத்தப் படுகிறது.

இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பக்தர்களுக்கும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அன்னாபிஷேகத்தைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்குக் குறைவிருக்காது என்று கூறப்படுகிறது. பலருக்குச் செல்வம் கோடி கோடியாக இருந்தாலும் ஒரு வாய் உணவு உண்ண முடியாத நிலை இருக்கும்.இதை ‘அன்ன த்வேஷம்’ என்பார்கள்.இந்த தோஷம் தீரச் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும்.