சென்னை

ன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. சமீபத்தில் வட தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கிச் சென்ற ‘மிக்ஜம்’ புயலால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. கடந்த 2 தினங்களாக மழை குறைந்து காணப்படுகிறது.

தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் இன்று  மற்றும் நாளை  மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.