டில்லி:

ரட்டை இலை சின்னம் தங்களுக்கு வழங்க உத்தரவிட கோரி, டிடிவி தினகரன் சார்பில், டில்லி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், நாளைபிற்பகல் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக முதலில் 2ஆக உடைந்தது. பின்னர் அது 3ஆக பிரிந்தது. இந்த நிலையில் ஜெ. மறைந்ததும் காலியானதாக அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை கேட்டு எடப்பாடி தரப்பு, ஓபிஎஸ் தரப்பு, டிடிவி தரப்பு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தன. இதன் காரணமாக இரட்டைஇலையை தேர்தல் ஆணையம் முடக்கியது.

இந்த நிலையில்,  ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒன்றாக இணைந்தனர். இதனால், இரட்டை இலை சின்னம் கோரி, டிடிவி அணியும், ஓபிஎஸ் இபிஎஸ் அணியும் தேர்தல்ஆணையத்தை நாடின. தேர்தல் ஆணையமும், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கியது.

இதை எதிர்த்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா  மற்றும் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தரப்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம் பல கட்ட விசாரணை நடத்தி முடித்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து டில்லி உயர்நீதிமன்றம் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.