கமதாபாத்

கமதாபாத் நகரை சேர்ந்த ஒரு பெண்மணி வெயில் கொடுமைக்காக தனது காரை சாணி கொண்டு மெழுகி உள்ளார்.

கிராமப்புற வீடுகளில் சுவர் மற்றும் தரையை சாணியைக் கொண்டு மெழுகும் பழக்கம் பழங்காலத்தில் இருந்து நடைபெறுகிறது.   இந்த பூச்சு காயந்த  பிறகு வீட்டை குளிர்காலத்தில் சூடாகவும் வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும் என மக்களால் நம்பப் படுகிறது.   மேலும் கிராம வாசிகள் இந்த பூச்சினை இயற்கை கிருமி நாசினி ஆகவும் கொசு விரட்டியாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது நாடெங்கும் தாங்க முடியாத அளவு வெயில் அடிக்கிறது.    இந்த வெப்பத்தை தவிர்க்க பலரும் பல விதங்களில் முயற்சி செய்து வருகின்றனர்.   அவ்வகையில் அகமதாபாத் நகரில் வசிக்கும் ஒரு பெண்மணி தனது காரை குளிர்ச்சியுடன் வைத்திருக்க் சாணியால் மெழுகி உள்ளார்.   இந்த புகைப்படம் முகநூலில் பகிரப்பட்டுள்ளது.

முகநூல் உபயோகிப்பாளரான ரூபேஷ் கவுரங்க தாஸ் என்பவர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து அத்துடன், “இது வரை யாரும் அறிந்திராத சாணியின் பயன்” என பதிந்துள்ளார்.   மேலும், “தற்போது அடிக்கும் 45 டிகிரி வெயிலில் இருந்து தன்னையும் காரையும் காக்க அகமதாபாத் வாசி திருமதி சேஜல் ஷா சாணியால் காரை மெழுகி உள்ளார்.  நல்ல குளிர்ச்சியான தகவல்” என பதிந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.  பலரது கவனத்தை கவர்ந்துள்ள இந்த புகைப்படத்தை குறித்து ஒரு சிலர் இதற்கு எத்தனை சாணி தேவைப்படும் என கேட்டுள்ளனர்.   அத்துடன் ஓரிருவர் இந்த காரில் பயனம் செய்பவர்கள் எவ்வாறு சாண நாற்றத்தை பொறுத்துக் கொள்கின்றனர் எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.