சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என கேள்வி எழுப்பி  சமூக வலைதளங்களில் இளைஞர்கள் டிரெண்டிங் செய்த நிலையில், இன்று  மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது.

இதற்கான தேர்வு முடிவுகள் 2022  அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

பின்னர் தீர்ப்புக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு குரூப் 2 ரிசல்ட் வெளியிடப்பட்டது. அப்போது  2022 டிசம்பர் மாதத்தில் குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரிசல்ட் வெளியிடப்படவில்லை.

இதனிடையே டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிடுவது தொடர்பான முடிவை 2023ம் ஆண்டு ஜனவரி அறிவிக்கப்படும் என தேர்வாணையம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. எனவே ஜனவரி இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது.  பின்னர் பிப்ரவரி 2023ல் தான் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிப்ரவரியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இரண்டு வாரங்களுக்கும் மேலாக ரிசல்ட் வெளியிடப்படாததால், தேர்வர்கள் ரிசல்ட் குறித்து கேள்வி எழுப்பினர்.

டிஎன்பிஎஸ்சி தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடாமல், ஏமாற்றி வருவதால், தேர்வை எழுதிய தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கடும் கோபம் எழுந்துள்ளது. இதையடுத்து,  சமூக ஊடகங்களில் குரூப் 4 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மார்ச் மாதத்தில் ஒரு வாரம் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், ’’தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் மாற்றுத் திறனாளிகள், ஏழைத் தேர்வர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்காமல் குரூப்4 தேர்வு முடிவை உடனே வெளியிட வேண்டும்’’ என்று தேர்வர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக #WeWantGroup4Results என்னும் ஹேஷ்டேக் நேற்று (மார்ச் 8) இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது.

நேற்று டிவிட்டர் தளத்தில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாக்கப்பட்டத. மேலும்,  இதுதொடர்பான மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகினது. இது தமிழ்நாடு அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் சமுதாயத்தில் சமூக வலைதளங்களில் பொங்கி எழுந்தது, ஆளும் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து,   குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின் தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌ அஜய்‌ யாதவ்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ’’ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்‌ தேர்வு – 4 (குரூப் 4) இல்‌ அடங்கிய பணிகளுக்கான தேர்வினை கடந்த 24.07.2022 அன்று நடத்தியது. இத்தேர்வின்‌ முடிவுகள்‌ குறித்து தேர்வாணையத்தால்‌ 14.02.2023 அன்று வெளியிடப்பட்ட விரிவான செய்திக் குறிப்பில்‌ தெரிவித்ததன்படி தேர்வு முடிவுகள்‌ தொடர்பான பணிகள்‌ தற்போது தேர்வாணையத்தில்‌ துரிதமாக நடைபெற்று வருகின்றன.

மேலும்‌, இத்தேர்வின்‌ முடிவுகள்‌ இம்மாத இறுதிக்குள்‌ வெளியிடப்படும்‌ என்று மீண்டும்‌ தேர்வர்களின்‌ கனிவான தகவலுக்காகத்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது’’.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு முடிவுகளுக்காக 18 லட்சம் பேர் காத்திருக்கும் நிலையில்,  இந்த முறையாவது அறிவித்தபடி டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை வெளியிடுமா?