சென்னை

மிழக அரசுப் பணியாளர் தேர்வாணைய புதிய பாடத்திட்டத்தால் தமிழக மாணவர்கள் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பணிகளுக்குத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4, என நான்கு நிலைகளில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது குரூப் 2, குரூப் 2ஏ (நேர்கானல் மற்றும் நேர்காணல் அல்லாத) தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் படி குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய தேர்வுகள் ஒரே தேர்வாக நடத்தப்பட உள்ளன.

இவை நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான தேர்வுகள் முதனிலை (Prelims) மற்றும் முதன்மை (Mains) எழுத்துத்தேர்வு கொண்டவையாக இருக்கும்.  இந்த  குரூப் 2 தேர்வின் முதனிலை தேர்வில் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து எழுதும் விதம் இருந்தன. தற்போது அவை நீக்கப்பட்டு, தமிழக அரசியல் வரலாறு, பாரம்பரியம் உள்ளிட்ட பாடப்பகுதிகளுடன் கூடிய 175 பொது அறிவு வினாக்களும், 25 திறனறி வினாக்களும் இடம்பெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாறுதல் குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி II மற்றும் IIA அதாவது, நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்கும் ஒரே மாதிரியான தேர்வாக, அதாவது, முதனிலை (Prelims) மற்றும் முதன்மை (Mains) எழுத்துத்தேர்வு கொண்டவையாக மாற்றப்பட்டுள்ளது.   இவ்வாறு இரண்டு பதவிகளுக்கும் தனித்தனியே தேர்வுகள் நடத்துவதால் தேவையற்ற கால விரயம் ஏற்படுகிறது.   அத்துடன் பொதுமக்களின் வரிப்பணமும் வீணாவதுடன் விண்ணப்பதாரர்களும் இரண்டு முறை தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது. ஆகையால் இவ்விரண்டு தேர்வுகளையும் ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் இரண்டில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுத முடியும் என்னும் நிலை அதாவது தமிழ் தெரியாதவர்கள் கூட இவ்வகையான தேர்வுகளை எழுத முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டு, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் முதனிலை (Prelims) தேர்வின் பாடத்திட்டத்தில் இரண்டு அலகுகள் (Units) சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த முதன்மை எழுத்துத் தேர்வில் தமிழுக்கும், தமிழகத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் தரும் வகையில், தமிழர் நாகரீகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, சங்க கால இலக்கியம், தமிழகத்தின் இசைப் பாரம்பரியம், நாடகக் கலை, பகுத்தறிவு இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கங்கள், பெண்ணியம் மற்றும் தற்கால தமிழ் மொழி குறித்த பாடத்திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.